சென்னை: ‘தங்களுக்கு எதிரானவர்களை பதவி நீக்கம் செய்ய, மத்திய அமைச்சர் அமித் ஷா நாடாளு மன்றத்தில் கொண்டுவந்துள்ள கருப்பு சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், மறைந்த முன்னாள் அமைச்சர் அ.ரகுமான் கான் எழுதிய நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அப்போது அவர் பேசிய தாவது: ரகுமான்கான் பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன். அவர் பேச்சு, சட்டமன்றத்தில் இடி முழக்கமாகவும், தமிழகம் முழுவதும் வெடிமுழக்கமாகவும் எதிரொலிக்கும்.
கருப்புச் சட்டம்: நேற்று நாடாளுமன்றத்தில், நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்த புலனாய்வு அமைப்பு களை வைத்து தங்களுக்கு எதிரானவர்களை பதவி நீக்கம் செய்ய, ஒரு கருப்புச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர். இதற்கு முன்பு, குடியுரிமை திருத்தச் சட்டம், வக்பு திருத்தச் சட்டம் என சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை எல்லாம் கொண்டு வந்தார்கள்.
அப்போதெல்லாம் இந்த சட்டங்களை திமுக எப்படி கடுமையாக எதிர்த்ததோ, அதே போல இந்த கருப்புச் சட்டத்தை யும் எதிர்ப்போம். மக்களுடைய கவனத்தை மட்டும் திருப்புவது மட்டுமல்ல, நாட்டையே ஜனநாயக பாதையில் இருந்து திசை திருப்புவதற்காக இதை செய் கிறார்கள்.
ரகுமான் கான் இடியாக பேசியதுடன், தென்றலாக கவிதைகளை யும் எழுதியிருக்கிறார். இதை யெல்லாம் அறிந்துகொள்ள இந்த 6 புத்தகங்களையும் எல்லோரும் வாங்கிப் படிக்க வேண்டும். குறிப்பாக, அவருடைய சட்டப்பேரவை உரைகளை எல்லோரும் படிக்கவேண்டும். எப்படிப் பேசவேண்டும், எப்படி உரைகளைத் தயாரிக்க வேண்டும் என்பதற்கு, அவருடைய உரைகள் ஒரு பாடப்புத்தகமாக வந்திருக்கிறது. ரகுமான்கான் போன்ற இடிமுழக்கங்களாக பலர் உருவாகவேண்டும்.
என்னைப் பொறுத்தவரை, ‘கொள்கையை விதைத்து, உழைப்பை உரமாக்கி, வெற்றியை விளைவிக்க வேண்டும்!’ இயக்கத்தில் எத்தனை கோடி பேரைச் சேர்த்தாலும், அவர்களை கொள்கை பிடிப்பு உள்ளவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு எப்போதும்போல திமுக துணை நிற்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
ரகுமான் கானின் ஹைக்கூ கவிதை: விழாவில், வரவேற்புரையாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “இன்று தமிழக அரசியலில் அடிமைகள் பாசிஸ்ட்டுகளைப் பார்த்து பயப்படுகிறார்கள், பம்முகிறார்கள். இந்த அடிமைகளுக்காக, அன்றே ஒரு ஹைக்கூ கவிதையை ரகுமான்கான் எழுதியுள்ளார்.
அதில் ‘மன்னராக இருந்தாலும்.. மண்டியிடாது.. மண் பொம்மை’ என்று கூறியிருந்தார். ஆனால், மண் பொம்மைகள்கூட செய்யாததை, இன்றைக்கு சில அடிமைகள் செய்கின்றனர். தமிழகத்தில் திமுக ஆட்சியை மீண்டும் அமைத்திட இந்த நூல் வெளியீட்டு விழாவில் நாம் அனைவரும் உறுதியேற்போம்’’ என்றார்.