சென்னை: சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், தூய்மைப் பணியாளர்கள் கடைசியாக வாங்கிய சம்பளத்தை குறைக்காமல் வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
சென்னை மாநகராட்சியின் 5, 6-வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் வகையில் மாநகராட்சியில் கடந்த ஜூன் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தூய்மைப் பணிக்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்கியதை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 13 நாட்களுக்கு பிறகு, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி கே.சுரேந்தர் முன்பு இந்த வழக்கு விசாரணை ஏற்கெனவே நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த சூழலில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதாக இருந்தால் தொழிலாளர் நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும். மாநகராட்சியின் தீர்மானத்தால் சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என்று வாதிடப்பட்டது. மாநகராட்சி தரப்பில், “சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில், ஏற்கெனவே 11 மண்டலங்களில் தூய்மைப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு தனியார் நிறுவனம் அதிக ஊதியத்துடன், வருங்கால வைப்புநிதி, காப்பீடு போன்ற சலுகைகளுடன் வேலை வழங்கும்” என்று தெரிவிக்கப்பட்டது.
ஒப்பந்த நிறுவனம் தரப்பில், “தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது அரசின் கொள்கை முடிவு. இதில் விதிமீறல் இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். 1,900 பணியாளர்கள் இன்னும் தேவை என்ற நிலையில் அவர்கள் பணியில் சேருவதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கே.சுரேந்தர் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவு: துப்புரவு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் சென்னை மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது. தூய்மைப் பணியாளர்களை பணியில் சேர்த்துக் கொள்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற அச்சம் தேவையற்றது. எனவே, இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம், தனியார் நிறுவனத்துடன் கலந்துபேசி, தூய்மைப் பணியாளர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தை குறைக்காமல் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு, இந்த வழக்கை நீதிபதி முடித்துவைத்தார்.