சென்னை: பொறியியல் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் 20 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.
பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், பொது கலந்தாய்வில் பங்கேற்க தவறியவர்களுக்காக பொறியியல் துணை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில் துணை கலந்தாய்வில் பங்கேற்க 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் தகுதியான 20,662 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி, அவர்களுக்கான துணை கலந்தாய்வு இணைய வழியில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாணவர்கள் விருப்பமான கல்லூரியை தேர்வு செய்ய இன்று மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கல்லூரி விருப்பத்தை தேர்வு செய்தவர்களுக்கு நாளை (ஆக.23) காலை 10 மணிக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். அதை நாளை இரவு 7 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும். உறுதி செய்த மாணவர்களுக்கு 24-ம் தேதி காலை 10 மணிக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.