சென்னை: தமிழக அரசின் அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மைய சங்கத்தின் தலைவர் எஸ்.மதுரம், பொதுச்செயலாளர் பெ.முனியப்பன் ஆகியோர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: பணி நிரந்தரம் கோரி சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த வேறொரு இடத்தை ஒதுக்குமாறும், அவர்களை கைதுசெய்ய வேண்டாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தூய்மை பணியாளர்களை பெண்கள் என்றும் பாராமல் காவல்துறையினர் கைது செய்தது கண்டனத்துக்குரியது.
தற்போது, சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாநகராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் போராடினால் அவர்களை காவல் துறையினர் கைது செய்வதை, போராட்டத்தை ஒடுக்கும் செயலாக கருதுகிறோம்.
அவர்களின் நியாயமான போராட்டத்துக்கு தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் பணியாற்றும் அலுவலக உதவியாளர்கள் முதல் அடிப்படை பணியாளர்கள் 2.44 லட்சம் பேரும் ஆதரவு தெரிவிக்கிறோம். தேவைப்பட்டால் அவர்களுடன் இணைந்து போராடவும் எங்கள் சங்கமும், இணைப்பு சங்கங்களும் தயாராக உள்ளன.
போராடுகின்ற தூய்மை பணியாளர்களை அழைத்து பேசி அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தற்போது உள்ள ஆணைகளை ரத்து செய்துவிட்டு, முன்பு போல தூய்மை பணியாளர்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்து அவர்களை நிரந்தர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்.
துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் அனைவரையும் காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும். தூய்மை பணியாளர் நியமனத்தில் தனியார்மயத்தை ரத்து செய்ய வேண்டும். எங்களின் இந்த 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப். 15, அக். 10 என இரண்டு கட்டங்களாக போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம்.
இந்த போராட்டங்களுக்கு பிறகும் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், அக். 15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.