சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், ராஜீவ்காந்தியின் 81-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு நலதிட்ட உதவிகளை கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை வழங்கினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 81-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை கலந்துக் கொண்டு ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், விஜய் வசந்த் எம்பி, மாநில துணைத் தலைவர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
தொடர்ந்து, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற விழாவில், ராஜீவ்காந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தி, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
பின்னர், செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசிய போது, “இந்தியாவை தலை நிமிர வைத்தவர் ராஜுவ் காந்தி. அவர் இல்லை என்றால் கிராமங்களில் ஜனநாயகம் இல்லை. உலக நாடுகளிடையே நம் பெருமையை உயர்த்தி காட்டியவர்.
ஆம்புலன்ஸ் உயிர்காக்கும் சேவை. இதுவே தெரியவில்லை என்றால், எப்படி பழனிசாமி முதல்வராக இருந்தார் என்றே தெரியவில்லை. பாஜக எழுதி கொடுப்பதை பழனிசாமி படித்து வருகிறார். பாஜக, ஆர்எஸ்எஸ்-ன் தலையாட்டும் பொம்மையாக அவர் இருக்கிறார்” என்றார்.
இந்நிகழ்ச்சியில், கட்சியின் மூத்த தலைவர்கள் கிருஷ்ணசாமி, பீட்டர் அல்போன்ஸ், மாநில பொருளாளர் ரூபி மனோகரன், அசன் மவுலானா எம்எல்ஏ, இலக்கிய அணி தலைவர் புத்தன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.