கோவை: மாநில ஜிஎஸ்டி அதிகாரிகளால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியிடப்பட்ட சிறப்பு கட்டுரையை இணைத்து தமிழக முதல்வருக்கு கோவையை சேர்ந்த 43 தொழில் நிறுவனங்கள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளன.
மாநில ஜிஎஸ்டி அதிகாரிகளால் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனத்தினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசிக்க தொழில் அமைப்புகள் சார்பில் சிறப்பு கூட்டம் கோவையில் நேற்று (ஆகஸ்ட் 20) நடந்தது. கொடிசியா, சீமா, இந்திய தொழில் வர்த்தக சபை, சைமா, டீகா, கிரெடாய், ஆர்டிஎப், ஓஸ்மா, டேப்மா உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் மாநில ஜிஎஸ்டி பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
கூட்டத்தின் முடிவில், 43 தொழில் அமைப்புகள் சார்பில் தமிழக முதல்வர், அமைச்சர்கள் மற்றும் மாநில ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. மனுவில், சிறிய தவறுகளுக்கு கூட அதிக அபராதம் விதித்தல் உள்ளிட்ட மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் எம்எஸ்எம்இ தொழில்துறையினர் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முதல்வர் நேரடியாக தலையிட்டு தீர்வு காண உதவ வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இந்து தமிழ் திசை’ எதிரொலி: முன்னதாக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் ‘கோவை மாவட்டத்தில் 20 ஆயிரம் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தியின் நகல் இணைத்து அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.