சென்னை: “திமுகவில் மல்லை சத்யா எப்போது இருந்தார்? அவர் சிறையில் அடைக்கப்பட்ட தேதி வாரியாக பட்டியல் தர வேண்டும்” என மல்லை சத்யாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை, திருவான்மியூரில் நடைபெற்ற மதிமுக பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியது: “என் மீது புழுதி வாரி தூற்ற ஒரு நபர் தயாராகி விட்டார். உண்மைகளை மறைத்து பொய்களை வெளியிடுவது என முடிவெடுத்து அவர் பேசுகிறார். நான் வாரிசு அரசியலை கொண்டு வந்துவிட்டேன் என்று சொல்லிவிட்டு நானா துரோகம் செய்பவன் என கொதித்து பொய் சொல்கிறார். மனசாட்சி என ஒன்று இருந்தால், அதன் கதவை தட்டி பார்க்க வேண்டும். அவர் கேட்பது எதுவானாலும் செய்து கொடுப்பதே என் கடமை என வாழ்ந்து வந்தேன்.
கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டவர்களை, தான் தொடர்ந்து சந்தித்து வந்ததில் என்ன தவறு என அவர் கேட்கிறார். எந்த ஜனநாயக கட்சி இதை ஏற்றுக் கொள்ளும். பல சிறைச்சாலைகளை கண்டிருப்பதாக அவர் கூறுகிறார். இதற்கு தேதி வாரியாக பட்டியல் தர வேண்டும். திமுகவில் இருந்து மதிமுகவுக்கு வந்ததாகக் கூறும் அவர் காலில் கோயபல்ஸே விழுவார்.
திமுகவில் அவர் எப்போது இருந்தார். என்ன வேண்டுமானாலும் திட்டமிடட்டும். நேரில் வருகிறேன், நாள் குறியுங்கள் என்கிறார். என்ன யுத்தமா நடக்கிறது, சவால் விடுவதற்கு. முறைப்படி விளக்கம் கடிதம் தான் அனுப்ப வேண்டும். நான் ஒன்றும் கோழையல்ல. ஆனால், நேருக்கு நேர் சந்திக்க அவசியமில்லை. இந்த பொறியில் மாட்டிக் கொள்ள மாட்டோம்.
துரை வைகோ அரசியலுக்கு வர வேண்டும் என நான் கனவிலும் எண்ணியதில்லை. அவர் கட்சிப் பொறுப்புக்கு வருவது தொடர்பான வாக்கெடுப்பை நாடகம் என அந்த நபர் சொல்கிறார். அவ்வளவு கீழ்த்தரமான வேலைகளை செய்பவனல்ல நான். கட்சியின் கட்டளையை மீற முடியாமல் துரை வைகோ அரசியலுக்கு வந்தார். அவரைத் தலைவராக்க வேண்டும் என கனவு காண்கிறேனா?
மத்திய அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேனா? இரண்டு முறை அமைச்சர் பதவி தருகிறோம் என மறைந்த பிரதமர் வாஜ்பாய் சொன்னபோதே ஏற்றுக் கொள்ள மறுத்தவன். வரும் தேர்தலில் திமுக கூட்டணி தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும். எத்தனை தொகுதி என்பது குறித்து தொண்டர்கள் கவலைப்படக் கூடாது. நம் கடமையைச் செய்வோம்” என்று அவர் பேசினார்.