தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று மதுரை மாவட்டம் பாரபத்தியில் நடைபெற்றது. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சியின் கூட்டணி நிலைப்பாடு தொடங்கி கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார், கட்சியின் திட்டம் என்ன என்று பல்வேறு விஷயங்கள் குறித்தும் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார்.
இதில் விஜய் பேசும்போது, “சினிமாவிலும், அரசியலிலும் எனக்கு மிகவும் பிடித்தவர் எம்ஜிஆர். அவரோடு பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை ஆனால், அவருடைய குணம் கொண்ட இந்த மதுரை மண்ணில் பிறந்த விஜயகாந்த்துடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவரை என்றும் மறக்க முடியாது. தமிழகத்தில் எம்ஜிஆர் ‘மாஸ்’ தலைவர். தனது எதிரியைக் கூட கெஞ்ச வைத்தவர் எம்ஜிஆர். ஆனால் அந்தக் கட்சியை இப்போது கட்டிக் காப்பது யார்? அது எப்படி இருக்கிறது. அந்தக் கட்சியின் அப்பாவி தொண்டர்கள் வேதனையில் தவிக்கிறார்கள்” என்றார்.
விஜய்யின் இந்த பேச்சு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, “எல்லாராலும் எம்ஜிஆர் ஆகிவிடமுடியாது. எல்லாராலும் ஜெயலலிதா ஆகிவிடமுடியாது. உலகத்துக்கே ஒரு எம்ஜிஆர் தான். உலகத்துக்கே ஒரு ஜெயலலிதாதான். சிலர் வாக்குகளை பெறவேண்டும் என்ற உத்திக்காக அண்ணாவின் பெயரையும், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பெயரையும் பயன்படுத்தலாம். அதிமுகவுக்கு எம்ஜிஆர் தான் சொந்தக்காரர். எனவே அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டுப் போட்ட கைகள் வேறு எந்த சின்னத்துக்கும் போடாது.
எங்கள் தலைவர்களின் பெயரைச் சொல்லாமல் யாரும் அரசியல் செய்யமுடியாது. ஆனால் அது உங்களுக்கு வாக்குகளாக மாறாது. யார் வேண்டுமானாலும் நாங்கள்தான் அடுத்த எம்ஜிஆர் என்று சொல்லலாம். ஆனால் அதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.