சென்னை: மார்கெட் போன பின்னர் அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை என்று விஜய் பேசியதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று மதுரை மாவட்டம் பாரபத்தியில் நடைபெற்றது. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சியின் கூட்டணி நிலைப்பாடு தொடங்கி கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார், கட்சியின் திட்டம் என்ன என்று பல்வேறு விஷயங்கள் குறித்தும் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார்.
இதில் விஜய் பேசும்போது, “கூடிய சீக்கிரம் மக்களை சந்திப்பேன். அது இடி முழக்கமாக மாறும். அது போர் முழக்கமாக மாறும். நான் மார்கெட் போன பின்னர் அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலனுடன் அரசியலுக்கு வந்துள்ளேன். அதுமட்டுமல்ல நான் நன்றிக்கடனுக்காக அரசியலுக்கு வந்துள்ளேன். 30 வருடங்களுக்கு மேலாக என்னை நீங்கள் தான் தாங்கிப் பிடிக்கிறீர்கள்.உங்களுக்காக வருகிறேன். நான் உங்களை மறக்க மாட்டேன்” என்று பேசினார்.
இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் மார்கெட் போன பின்னர் அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை என்று அவர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனைத் தான் குறிப்பிடுகிறார் என்று பலரும் விமர்சித்தனர்.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசனிடம் விஜய்யின் இந்த பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “விஜய் யாருடைய பெயரையாவது குறிப்பிட்டு பேசினாரா? பிறகு அட்ரஸ் இல்லாத லெட்டருக்கு நான் பதில் போடலாமா? அவர் என் தம்பி” என்று தெரிவித்தார்.