திருச்சி: “மதுரை தவெக மாநாட்டுக்கு முதல் நாளே தொண்டர்கள் சென்றது, நாட்டில் வேலை இல்லாமல் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தெரு நாய்கள் இல்லை என்றால் எலிகள் பெருகும், அதனால் பிளேக் நோய் வரும். அதனைக் கட்டுப்படுத்த போராட வேண்டியிருக்கும். தெரு நாய்களை முன்பே கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். விலங்கு நல ஆர்வலராக இருந்தாலும் தமக்கு பாதிப்பு ஏற்படும்போது பயம் வந்துவிடும். அதை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்தவில்லை என்றால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். திருடன், பேய் பயத்தை விட நாய் பயம் அதிகம் வந்துவிடும்.
மதுரையில் நடைபெறுவது தமிழக வெற்றி கழகம் கட்சியின் மாநாடு. அந்தக் கட்சியின் மாநாடு நோக்கம் வெற்றி அடைந்தால் சரிதான். முதல் நாளே மாநாட்டுக்கு தொண்டர்கள் சென்றது நாட்டில் வேலை இல்லாமல் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.
அண்மையில் கனிமொழி எம்.பி கூறும்போது நாங்கள் பாஜக கொள்கைகளில் இருந்து மாறுபடுகிறோம். அவர்கள் தமிழ்நாட்டு நலனுக்கு என்ன செய்தார்கள் எனக் கேள்வி எழுப்பினார். அவரைப் பார்த்து நான் கேள்வி எழுப்புகிறேன்… நீங்கள் தமிழ்நாட்டு நலனுக்கு என்ன செய்தீர்கள்? ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்து வெளி நாட்டுகளுக்கு பிரதிநிதியாக சென்று பேசிய போது ஏன் இந்தக் கொள்கை தெரியவில்லை?
வாஜ்பாய் ஆட்சியில் அந்தக் கொள்கை ஏற்புடையதாக இருந்தது. அப்போது கூட்டணியில் இருந்தீர்கள். அதனால், குஜராத் கலவரத்தை ஆதரித்து பேசினீர்கள். தற்போது கூட்டணியில் இல்லை, அதனால் அவர்களது கொள்கை ஏற்புடையதில்லை என்கிறீர்கள். இப்போது மணிப்பூர் கலவரத்தை எதிர்த்து பேசுகிறீர்கள்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்வது என்பது மகிழ்ச்சியான விஷயம். அதனை வரவேற்கிறேன். தெருவுக்குத் தெரு மதுக் கடைகளை திறந்து வைத்துவிட்டு போதையை ஒழிப்பேன் என கூறுவது எப்படி சாத்தியம். அவர்கள் பாஷையில் குடிசை ஒழிப்பு எனக் கூறி, குடிசையை கொளுத்தி விட்டு குடிசை ஒழிப்பு என்பார்கள். அதேபோல மது ஒழிப்பு எனக் கூறிக்கொண்டு மதுவை குடித்துதான் ஒழிப்பார்கள் போல” என்றார் சீமான்.