சென்னை: “அதிமுகவும் தவெகவும் மறைமுக கூட்டணி வைத்திருப்பது விஜய்யின் மதுரை மாநாட்டு பேச்சு மூலம் அம்பலமாகிறது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட ஸ்னோலின் குறித்து பேசிய தவெக தலைவர் விஜய், மறந்தும் கூட துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்த அதிமுக குறித்து வாய் திறக்காதது ஏனோ?
திமுகவுக்கும் பாஜகவுக்கும் மறைமுக கூட்டணி என குற்றச்சாட்டு சொல்லும் விஜய், அதற்கான ஆதாரத்தை வெளியிடாமல் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்மொழிந்ததை வழிமொழிந்துள்ளார். இதன்மூலம் அதிமுகவும் தவெகவும்தான் மறைமுக கூட்டணியாக இருப்பது அம்பலமாகிறது.
அந்தக் கூட்டணியில் பாஜகவும் இருப்பதால், அதிமுக – பாஜக கூட்டணியின் மறைமுக கூட்டணி பார்ட்னராகவே விஜய் செயல்படுகிறார் என்பதுதான் தவெக மாநாட்டு செய்தி” என்று வன்னியரசு தெரிவித்துள்ளார்.