மதுரை: மதுரையில் நடைபெற்ற தவெக 2-வது மாநில மாநாட்டில், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சியின் கூட்டணி நிலைப்பாடு தொடங்கி கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார், கட்சியின் திட்டம் என்ன என்று பல்வேறு விஷயங்கள் குறித்தும் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று மதுரை மாவட்டம் பாரபத்தியில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்ட நிலையில், மங்கல இசை, மதுரை மாநாட்டுக்கான சிறப்புப் பாடல் என்று கூட்டம் தொடங்கியது. அதில் விஜய் பேசியதாவது: “ஒரு கானகத்தில் சிங்கம், புலி, நரி என்று பல்வேறு மிருகங்கள் இருந்தாலும் சிங்கம்தான் காட்டின் ராஜா. அந்த சிங்கம் வேட்டைக்குப் போனாலும் ‘சிங்கிளாக’ தான். தன்னைவிட பெரிய விலங்கைதான் வேட்டையாடும். அதுதான் நம் நிலைப்பாடு.
சினிமாவிலும், அரசியலிலும் எனக்கு மிகவும் பிடித்தவர் எம்ஜிஆர். அவரோடு பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை ஆனால், அவருடைய குணம் கொண்ட இந்த மதுரை மண்ணில் பிறந்த விஜயகாந்த்துடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவரை என்றும் மறக்க முடியாது. தவெகவின் அரசியல் உண்மையானது, உணர்வுப்பூர்மானது, நல்லவர்களுக்கானது, நாட்டு மக்களுக்கானது, நல்லதை மட்டுமே செய்யும் அரசியல்.
விக்கிரவாண்டி மாநாடு தமிழக அரசியலின் தட்பவெப்பத்தையே மாற்றியது. அதனைத் தொடர்ந்து இன்று இந்த மாநாட்டில் ஒலிக்கும் குரல் ஒற்றைக் குரல் அல்ல. ஒட்டுமொத்த தமிழர்களின் குரல். இந்தக் குரல் மாநில உரிமைக்காக, பெண்கள் நலனுக்காக, சமூக நீதிக்காக, சம உரிமைக்காக ஒலிக்கும் குரல். இதற்கு எதிராக எத்தனை கூக்குரல் வந்தாலும் ஓங்கி ஒலிக்குமே தவிர ஓயாது.
நான் கட்சியை ஆரம்பிக்கும் முன்னர் அத்தனை விமர்சனங்கள் எழுந்தன. அவரே ஆரம்பிக்கவில்லை, இவரா ஆரம்பிக்கப்போகிறார் என்றார்கள். அப்புறம் கட்சியை அறிவித்தவுடன். கட்சிதானே ஆரம்பித்திருக்கிறார் என்றார்கள். அப்புறம் மாநாடு நடத்தினேன். இப்போது இரண்டாவது மாநாடு நடக்கிறது. இப்போது கட்சி ஆரம்பித்தால், மாநாடு நடத்தினால் மட்டும் ஆட்சியைப் பிடித்துவிட முடியாது. ஆட்சியைப் பிடிப்பது ஈஸி இல்ல. ஷூட்டிங்கில் இருந்து வந்து ஆட்சியப் பிடிப்பாரா? என்றுசொல்கிறார்கள். இந்தக் கூட்டம் எப்படி ஓட்டா மாறும் என்று இன்னொரு பக்கம் விமர்சனம்,
என்னைப் பற்றிப் பேசும் அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான். இந்தக் கூட்டம் ஆட்சியாளர்களுக்கு வேட்டா, நம்மள கோட்டைக்கு அனுப்பப்போகும் ரூட்டா மாறும். நான் அரசியலுக்கு வந்தது பெண்கள், பெண்குழந்தைகள், முதியவர்கள், ஆதரவற்றோர், மூன்றாம் பாலினத்தவர்கள், நெசவாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் என எல்லோருக்கும் நல்லது செய்யவே.
நமது ஒரே கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக தான். நமக்கு, யாருக்காகவும் எதற்காகவும் எந்த பயமும் இல்லை. நாம் கூட்டணி வைத்து ஏமாற்றும் கட்சி கிடையாது. பாசிச பாஜகவுடன் உறவு வச்சுக்க நாமென்ன உலக மகா ஊழல் கட்சியா? நாம யார் தெரியுமா? இந்தியாவின் மாபெரும் சக்தி கொண்ட மகத்தான வெகுஜன மக்கள் படை.
நாம் எந்த அடிமைக் கூட்டணியிலும் சேர வேண்டிய அவசியமில்லை. ஒருபுறம் ஆர்எஸ்எஸ்-ஸிடம் அடிபணிந்து கொண்டு, இன்னொரு பக்கம் மதச்சார்பற்ற கூட்டணி என்று மக்களை ஏமாற்றும் கூட்டணி அமைப்பதெல்லாம் நாம் செய்வதில்லை. கூட்டணி பற்றி சஸ்பென்ஸ்லேயே சஞ்சாரம் செய்யுங்கள். 2026 தேர்தலில் தவெக – திமுக இடையே தான் போட்டி. அதனால், அலையன்ஸ வச்சு தப்பிச்சுடலாம்னு நினைக்குறவங்க கனவு ஒரு நாளும் மெய்ப்படாது. பாசிச பாஜக, பாய்சன் திமுகவுக்கு எதிராக மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுத்துள்ளோம்.
மாண்புமிகு பிரதமர் மோடி ஜி அவர்களே, 3-வது முறையாக நீங்கள் தான் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ளீர்கள்? நீங்கள் ஆட்சிக்கு வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் நல்லது செய்யவா? இல்லை… சிறுபான்மையின மக்களுக்கு எதிராக சதி செய்யவா? மக்கள் நலனுக்காக, அவர்களின் சார்பில் நான் உங்களிடம் சில கேள்விகளை கேட்கிறேன். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள். உங்கள் முரட்டுப் பிடிவாதத்தால் நடக்கும் நீட் தேர்வை ரத்து செய்யுங்கள். அது போதும். செய்வீர்களா?
இல்லை, மக்களுக்காக ஒன்றும் செய்யாமல் 2029 வரை சொகுசுப் பயணம் போகலாம் என்று திட்டம் போடுகிறீர்களா?. நீங்கள் என்ன தான் திட்டம் போட்டாலும், தாமரை இலையில் தண்ணி ஒட்டாது, தமிழ்நாட்டு மக்கள் மட்டும் எப்படி ஒட்டுவார்கள்? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண் மதுரை. ஆனால், கீழடி வரலாற்றை மறைத்து எங்கள் நாகரிகத்தை அழிக்க உள்ளடி வேலை செய்யலாம்னு நினைக்குறீங்க. உங்கள் எண்ணெமெல்லாம் ஈடேறாது
தமிழகத்தில் எம்ஜிஆர் ‘மாஸ்’ தலைவர். தனது எதிரியைக் கூட கெஞ்ச வைத்தவர் எம்ஜிஆர். ஆனால் அந்தக் கட்சியை இப்போது கட்டிக் காப்பது யார்? அது எப்படி இருக்கிறது. அந்தக் கட்சியின் அப்பாவி தொண்டர்கள் வேதனையில் தவிக்கிறார்கள். அதனால், என்ன வேஷம் போட்டுக் கொண்டு வந்தாலும் பாஜகவின் வித்தை இங்கே வேலைக்கு ஆகாது.
அதேபோல், தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் வெற்று விளம்பர மாடல் திமுக, பாஜகவை மறைமுகமாக ஆதரிக்கிறது. ஆட்சியில் இல்லாவிட்டால் போங்க மோடிங்குறது. ஆட்சிக்கு வந்துவிட்டால் வாங்க மோடிங்குறது. தவிர, டெல்லியில் சீக்ரெட் மீட்டிங் நடத்துறது. ‘ஸ்டாலின் அங்கிள் வாட் அங்கிள், இட்ஸ் வெரி ராங் அங்கிள்.’ ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால், அதை செய்தது கபட நாடக மு.க.ஸ்டாலின் அங்கிளாகவே இருந்தாலும் கேள்வி கேட்பேன். நீங்கள் நேர்மையான, நியாயமான ஆட்சி நடத்துகிறீர்களா? பெண்களுக்கு ரூ.1000 கொடுத்துட்டா போதுமா. அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்றார்கள். சொன்னதெல்லாம் செஞ்சாங்களா?
இங்கே இல்லை என்று மக்கள் முழங்குகிறார்கள். அது உங்களுக்கு கேட்கிறதா? இது வெறும் சாதாரணமான முழக்கம்தான். கூடிய சீக்கிரம் மக்களை சந்திப்பேன். அது இடி முழக்கமாக மாறும். அது போர் முழக்கமாக மாறும். நான் மார்கெட் போன பின்னர் அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலனுடன் அரசியலுக்கு வந்துள்ளேன்.
அதுமட்டுமல்ல நான் நன்றிக்கடனுக்காக அரசியலுக்கு வந்துள்ளேன். 30 வருடங்களுக்கு மேலாக என்னை நீங்கள் தான் தாங்கிப் பிடிக்கிறீர்கள்.உங்களுக்காக வருகிறேன். நான் உங்களை மறக்க மாட்டேன்.
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் போன பின்னர்தான் கட்சியே ஆரம்பித்தேன். 2026-ல் கபட நாடக திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன். வரவிருக்கும் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை நான் அறிவிக்கிறேன். மதுரை கிழக்கு விஜய், மதுரை மேற்கு விஜய், சோழவந்தான் விஜய், உசிலம்படி விஜய். என்னடா, எல்லா தொகுதிகளிலும் என் பெயரையே சொல்கிறேன் என நினைக்கிறீர்களா?
ஆம், 234 தொகுதிகளிலும் நான்தான் வேட்பாளர் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தவெகவின் வேட்பாளருக்கு வாக்களித்தால் அது எனக்கு வாக்களிப்பதாகும்.
நான் மக்களுக்காக உழைப்பதற்காக வந்துள்ளேன், எனக்கு இனி வேறு வேலை இல்லை. என் கடன் இனி மக்களுக்கு பணி செய்வதே. மக்களை நேசிக்கும் நான், மக்களுக்காக வருகிறேன். ஒரு அரசியல் தலைவன் உண்மையானவனாக இருக்க வேண்டும். நான் உண்மையான அரசியல்வாதியாக உங்களுக்காக வருகிறேன்.
என்னை சினிமாக்காரன் என்று சொல்கிறார்கள். எல்லா சினிமாக்காரனும் முட்டாள் கிடையாது , எல்லா அரசியல்வாதியும் அறிவாளியும் கிடையாது. இங்கே, அம்பேத்கரை, நல்லகண்ணுவை, காமராஜரை தோற்கடித்தது அரசியல்வாதிதான், சினிமாக்காரன் அல்ல. நான் மக்களுக்கான நல்ல அரசியல்வாதி” என்று விஜய் பேசினார்.
விஜய் சொன்ன குட்டிக் கதை: பேச்சின் ஊடே விஜய் ஒரு குட்டிக் கதை சொன்னார். “ஒரு ராஜா தனக்கு ஒரு உண்மையான தளபதி வேண்டுமென்று நினைத்தார். அதற்காக ஒரு போட்டி வைத்தார். அதில் 10 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொருத்தருக்கும் ஒரு விதை நெல்லை கொடுத்த ராஜா, இதை வளர்த்துக் கொண்டு வாருங்கள் என்றார். சில நாட்களுக்குப் பின்னர் ஒருவர் ஆள் உயரம், ஒருவர் தோள் உயரம் என அதை வளர்த்துக் கொண்டு வந்தார்கள்.
9 பேரும் அப்படி வளர்த்துக் கொண்டு வர, 10-வது நபர் மட்டும் வெறும் தொட்டியைக் கொண்டு வந்தார். கூடவே அழுது கொண்டிருந்தார். இதை எவ்வளவு முயற்சித்தும் என்னால் வளர்க்க முடியவில்லை என்று அழுது கொண்டே சொன்னார். அந்த நபரை கட்டியணைத்த மன்னர், நீ தான் என் தளபதி என்றார். ஏனெனில் அவர் கொடுத்தது அவித்த நெல். 9 பேரும் பொய் சொல்ல மன்னருக்கு ஒரு உண்மையான தளபதி கிடைத்தார். நீங்கள் எல்லோரும் தான் அந்த ராஜா. நீங்கள் தேர்ந்தெடுக்கப் போகும் தளபதி யார்?” என்று குட்டிக் கதையை விஜய் சொல்லி முடித்தார்.