புதுடெல்லி: “நான் ஓர் அரசியல்வாதி அல்ல, குடியரசு துணைத் தலைவர் பதவியும் அரசியல் பதவி அல்ல. அதனால்தான், குடியரசு தலைவர் பதவிக்குப் போட்டியிட ஒப்புக்கொண்டேன்” என்று இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இண்டியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, என்சிபி-எஸ்சிபி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சியின் எம்பி ராம் கோபால் யாதவ், திமுக எம்பி திருச்சி சிவா, சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் முன்னிலையில், அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த வேட்புமனு தாக்கலின்போது ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங்கும் உடன் இருந்தார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலை, சுதர்சன் ரெட்டி சந்தித்துப் பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சுதர்சன் ரெட்டி, “குடியரசு துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட நான் வேட்புமனு தாக்கல் செய்த போது, அதற்கு சஞ்சய் சிங்கை அனுப்பிவைத்தவர் அரவிந்த் கேஜ்ரிவால். அவருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவருக்கு நான் எனது நன்றியை தெரிவிக்கவே அவரைச் சந்திக்க வந்தேன்.
கடந்த இரண்டு நாட்களாக நான் ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன். நான் அரசியல்வாதி அல்ல, குடியரசு துணைத் தலைவர் பதவியும் அரசியல் பதவி அல்ல. இதில் பலருக்கு தவறான கருத்துகள் உள்ளன. இது ஓர் உயர் அரசியலமைப்பு அலுவலகம். சுதந்திரமான, தன்னாட்சி கொண்ட, பாரபட்சமற்றதாக இது இருக்க வேண்டும். இவை ஒரு நீதிபதியின் குணங்களும்கூட. அதனால்தான், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு நான் போட்டியிட வேண்டும் என நண்பர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டேன்.
இதற்கு, மூத்த தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஒப்புதலும் கிடைத்துள்ளது. அவர் தனது ஆதரவை வெளிப்படுத்தியதற்கு எனது நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு, நாட்டில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது, எத்தகைய சவால்கள் நம் முன் உள்ளன என்பதைப் பற்றி புதிதாக அவர் சிந்திக்கத் தூண்டி இருக்கிறார். அதற்காகவும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எந்த ஓர் அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லாத, நாட்டின் மீது அக்கறை கொண்ட குடிமக்களில் ஒருவனாக நான் இருப்பேன்” என தெரிவித்தார்.
முன்னதாக, அரவிந்த் கேஜ்ரிவால் பேசும்போது, “எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரான சுதர்சன் ரெட்டியை ஆம் ஆத்மி கட்சி ஆதரிக்கிறது. அவர் என்னை சந்திக்க வந்தார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாங்கள் விவாதித்தோம். மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் வந்தனர். தேர்தல் உத்திகள் குறித்து விவாதித்தோம். சுதர்சன் ரெட்டியை வெற்றிபெற வைக்க முயல்வோம்.
இந்த தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படுகிறது. எந்த ஒரு கொறடா உத்தரவும் இதற்கு இருக்காது. எனவே, அனைத்துக் கட்சிகளுக்கும் நான் சொல்ல விரும்புவது, அவர் ஒரு நீதிபதியாக சிறப்பாக செயல்பட்டுள்ளார், பெரிய முடிவுகளை எடுக்கும்போது எவ்வித அச்சமும் இன்றி எடுத்துள்ளார், எனவே அவர் அந்த பதவிக்கு மரியாதையை ஏற்படுத்துவார், அவரை நாட்டின் வேட்பாளர் என்று நான் கூறுவேன்” என தெரிவித்தார்.