புதுடெல்லி: மத்திய அரசு முன்மொழிந்துள்ள இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி வரி முறையை ஏற்க மாநில அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு நற்செய்தியாக தீபாவளிக்குள் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி கணிசமாக குறைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதாவது குறைந்த பட்சம் 5 சதவீதம், அதிகபட்சம் 18 சதவீதம் கொண்ட இரு அடுக்குகளாக ஜிஎஸ்டி வரியை சீர்திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது, ஜிஎஸ்டி வரி விகிதம் 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக உள்ளது. இதில், 12 சதவீத வரி விதிப்பில் உள்ள பொருட்களை 5 சதவீதத்தின் கீழ் கொண்டு வரவும், 28 சதவீத வரி விதிப்பில் உள்ள 90 சதவீத பொருட்களை 18 சதவீத வரிவிதிப்புக்குள் கொண்டுவரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், பொருட்களின் விலை குறைந்து சாமானிய மக்களுக்கு நிதி சுமையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த திட்டம் தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலால் அமைக்கப்பட்ட மாநில அமைச்சர்கள் குழு ஆலோசனை மேற்கொண்டது. மாநில அமைச்சர்கள் குழுவின் தலைவரும் பிஹார் துணை முதல்வருமான சாம்ராட் சவுத்ரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அரசின் புதிய திட்டத்தை ஏற்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது குறித்து பேசிய சாம்ராட் சவுத்ரி, “ஜிஎஸ்டி வரி வகிதத்தில் உள்ள 12 சதவீதம் மற்றும் 28 சதவீதத்தை நீக்குவது என்ற முன்மொழிவை மத்திய அரசு முன்வைத்துள்ளது. இது குறித்து நாங்கள் விவாதித்தோம். மத்திய அரசின் முன்மொழிவுக்கு எங்கள் ஆதரவை அளித்துள்ளோம். இதனை ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு நாங்கள் பரிந்துரைப்போம். ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி முடிவை எடுக்கும்” என தெரிவித்தார்.
எனினும், அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. செப்டம்பர் தொடக்கத்தில் கூட்டம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் இது குறித்து பரிசீலிக்கப்படும். ஜிஎஸ்டி கவுன்சிலும் ஒப்புதல் தரும்பட்சத்தில் 2-அடுக்கு ஜிஎஸ்டி வரிமுறை நாடு முழுவதும் அமலுக்கு வரும். இதன் மூலம், தீபாவளிக்கு முன்னதாகவே பல்வேறு பொருட்களின் விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.