மயிலாடுதுறை: “மத்திய அரசின் புதிய மசோதா மூலம் பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு பிடிக்காத பாஜக முதல்வர்களை கூட பதவியில் இருந்து அப்புறப்படுத்தும் ஆபத்து இருக்கிறது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் எச்சரித்துள்ளார்.
மயிலாடுதுறையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மத்திய பாஜக அரசு, அரசியல் சாசத்தின் 130-வது திருத்தம் என்ற பெயரில் 3 புதிய மசோதாக்களை தாக்கல் செய்துள்ளது. ஏற்கெனவே உஃபா சட்டம் என்ற பெயரில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்போர் மீது விசாரணையின்றி, காலவரையறையின்றி சிறையில் அடைக்கும் நிலை இருந்தது. அரசுக்கு எதிராக போராடுபவர்கள், கருத்து சொல்பவர்களை கைது செய்யக் கூடிய வகையில் பிஎன்எஸ் என்ற புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வந்தனர்.
இப்போது முதல்வர்கள், அமைச்சர்கள், பிரதமர் உள்ளிட்ட யாராக இருந்தாலும் 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்கள் தானாகவே பதவி விலக நேரிடும் என்ற புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளனர். ஏற்கெனவே அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வுத் துறை போன்றவற்றை பயன்படுத்தி எதிர்க்கட்சி முதல்வர்கள், அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு என்ற பெயரில் வழக்குப் பதிவு செய்வது, கைது செய்வது, சிறையில் அடைப்பது போன்ற சட்ட விரோத செயல்பாடுகளை செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த மசோதா மூலமாக பிடிக்காத முதல்வர்கள், அமைச்சர்கள் என யாரை வேண்டுமானாலும் மத்திய ஏஜென்சிகளை அனுப்பி பொய் வழக்கில் கைது செய்து, பொய் வழக்கு போட்டு 30 நாட்களுக்கு மேலாக சிறையில் வைக்க முடியும். இது முற்றிலும் ஜனநாயகத்துக்கு, கூட்டாட்சி கோட்பாட்டுக்கு, மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது.
பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு பிடிக்காத பாஜக முதல்வர்களை கூட இச்சட்டத்தை பயன்படுத்தி அவர்களை பதவியில் இருந்து அப்புறப்படுத்தும் ஆபத்து இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்பதற்காக தாங்கள் நினைக்கும் வகையில் சட்டத்தை உருவாக்குவது ஜனநாயக நாட்டில் அனுமதி முடியாத ஒன்று.
எனவே, எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளுங்கட்சியில் உள்ள இந்தியாவின் கூட்டாட்சியை மதிக்கும் அனைவரும் எதிர்க்க வேண்டிய மசோதா இது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியிலும் இந்த மசோதாவை எதிர்த்து போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். உடனடியாக இந்த மசோதவை திரும்பப்பெற வேண்டும்” என்றார்.