விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் பணிபுரிய பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.
‘சர்கார்’ படத்துக்குப் பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் – விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து படம் பண்ண பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் கூறிய கதையும் விஜய்க்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. ஆனால், அப்போதைய சந்தை நிலவரம் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு, விஜய் – நெல்சன் இணைந்த ‘பீஸ்ட்’ படத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கிறது சன் பிக்சர்ஸ்.
‘துப்பாக்கி’, ‘கத்தி’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய படங்களில் இணைந்து பணி புரிந்துள்ளது விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி. மூன்றுமே மாபெரும் வெற்றி படங்கள் என்பதால், இந்தக் கூட்டணி பெரும் எதிர்பார்ப்பு உண்டு. ஆனால், இப்போது விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதால் மீண்டும் இக்கூட்டணி இணைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பது உறுதியாகிறது.
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘மதராஸி’. செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம், பிஜு மேனன், விக்ராந்த், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 24-ம் தேதி இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது.