சிவகங்கை: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 2 பேருக்கு ஒரே ஆதார் எண்ணை வழங்கியதால் அதைச் சரிசெய்ய முடியாமல் 8 ஆண்டுகளாக மாணவி ஒருவர் போராடி வருகிறார். அரசின் பல்வேறு ஆவணங்களைப் பெறு வதற்கும், தேர்வுகள், அரசின் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. எனினும் ஆதாரை போலியாக தயாரித்து நலத்திட்ட உதவிகள், தனியார் வங்கிகளில் கடன் பெறுவது உள்ளிட்ட மோசடிகளில் சிலர் ஈடுபடுகின்றனர்.
இந்திய தேர்தல் ஆணையமும் ஆதாரை ஓர் ஆவணமாக ஏற்க மறுத்து வருகிறது. இதனால் ஆதார் மீதான நம்பகத் தன்மையே கேள்விக்குறியாக உள்ள நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையமே 2 பேருக்கு ஒரே ஆதார் எண்ணை வழங்கியிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராஜசேகர் மகள் நாடீஸ்வரி (18). இவர் அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு பயின்றபோது ஆதார் எடுத்தார். அதே சமயத்தில் அதே பள்ளியில் பயின்ற ஜெஸ்மி என்பவரும் ஆதார் எடுத்தார். அப்போது இருவருக்கும் ஒரே ஆதார் எண் வந்துள்ளது. இதை யாரும் கவனிக்காத நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு நாடீஸ்வரி பெயரை அவரது குடும்ப அட்டையில் சேர்க்க முயன்றனர்.
அப்போது அவரது ஆதார் எண்ணில் ஜெஸ்மி பெயர் இருப்பதாகக் கூறினர். மேலும் அந்த ஆதார் எண்ணை ஜெஸ்மியின் குடும்ப அட்டையில் சேர்த்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் நாடீஸ்வரி பெயரை குடும்ப அட்டையில் சேர்க்க முடியவில்லை.
இந்நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு நாடீஸ்வரி சிவகங்கை அரசு கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்தார். ஆனால் அவரது ஆதார் எண்ணை வைத்து கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. வங்கிக் கணக்கும் தொடங்க முடியவில்லை. இதனால், அவர் சிரமமடைந்து வருகிறார்.
இதுகுறித்து நாடீஸ்வரி பெற்றோர் கூறியதாவது: 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் எடுத்த சமயத்தில் கொடுக்கப்பட்ட கார்டில் எனது மகளின் விவரங்கள் இருந்தன. அதன் பின்னர் எனது மகள் கைரேகை பதிவு செய்து உள்ளே சென்றால் ஜெஸ்மி என்பவரது விவரங்கள் வருகின்றன. இதுகுறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு, மதுரையில் உள்ள ஆதார் சேவா கேந்திரா அலுவலகத்தில் புகார் தெரிவித்தோம். அவர்களும் சரிசெய்து தருவதாக கூறினர்.
ஆனால் இதுவரை சரிசெய்யவில்லை. இதுகுறித்து பெங்களூரு இந்திய தனித்துவ அடையாள ஆணைய மண்டல அலுவலகத்துக்குப் புகார் அனுப்பினோம். நடவடிக்கை எடுக்கவில்லை. ஆதார் அட்டை தொடர்பான சேவைக்கு உதவும் எண் 1947-ல் பலமுறை தொடர்பு கொண்டும் பயனில்லை. தற்போது எங்களது மகளின் பெயரை குடும்ப அட்டையில் சேர்க்க முடியவில்லை.
அரசின் கல்வி உதவித்தொகை பெற முடியவில்லை. 8 ஆண்டுகளாகப் போராடியும் எங்களால் ஆதார் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை. இதனால் மிகுந்த மனஉளைச்சலில் உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டபோது, ‘இதுவரை கேள்விப்படாத பிரச்சினையாக உள்ளது. பெங்களூரு இந்திய தனித்துவ அடையாள ஆணைய மண்டல அலுவலகத்தில் தொடர்பு கொண்டு சரிசெய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.