ராமேசுவரம்: இலங்கை தமிழர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை அகதிகளுக்கான ஐக்கிய நாடு களின் உயர் ஆணையம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இலங்கையில் 1980-களில் தொடங்கிய உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்தனர். குறிப்பாக 1983-ம் ஆண்டு முதல் தமிழகத்துக்கு 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 இலங்கை தமிழர்கள் வந்துள்ளனர்.
இதில், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் (UNHCR) மற்றும் இந்திய அரசின் மூலமாக 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளனர். குறிப்பாக கடந்த 25 ஆண்டுகளில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் மூலம் மட்டும் 20 ஆயிரம் இலங்கை தமிழர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் 29 மாவட்டங்களில் உள்ள 108 மறுவாழ்வு முகாம்களில் 60 ஆயிரம் இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். மேலும் 40 ஆயிரம் பேர் முகாம்களுக்கு வெளியே காவல் நிலையங்களில் பதிவு செய்து வசிக்கின்றனர். ஒடிசாவின் மல்கன்கிரியில் உள்ள முகாமில் 60 இலங்கை தமிழர்கள் உள்ளனர்.
மேலும், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 மார்ச் மாதத்திலிருந்து தமிழகத்துக்கு 320-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். இவர்கள் மண்டபத்தில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் அகதிகள், குடியேற்ற சட்டத்தின் விதிகளை மீறியதாகக் கூறி, கைது செய்யப்படுவார்கள் என்ற அச்சம் நிலவுகிறது.
ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட வெல்வவந்தரம் (54) என்பவர் 2025 ஆகஸ்ட் 12-ம் தேதி கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியதும் கைது செய்யப்பட்டார். அவர், நீதித்துறை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் மூலம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த ஒரு இலங்கை தமிழ் தம்பதி கைது செய்யப்பட்டனர். இந்த தம்பதி 1996-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் வசித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே மாதத்திலிருந்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின உயர் ஆணையம் மூலம் அனுப்பப்படும் அகதிகள் இலங்கையில் கைது செய் யப்படுவது அதிகரித்துள்ளது. இதனால் தற்போது இலங்கைக்கு அகதிகளை திருப்பி அனுப்புவதை ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இதனிடையே இலங்கை அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், ‘இலங்கை திரும்பும் அகதிகள் மீது குற்றவியல் வழக்கு நிலுவையில் இல்லாவிட்டால் கைது நடவடிக்கை இருக்காது. உள்நாட்டுப் போரின்போது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று பயந்து அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி, மீண்டும் தற்போது நாடு திரும்பினால் அவர்கள் குடியேற்றச் சட்டங்களை மீறியது மன்னிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.