புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரான ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, என்சிபி-எஸ்சிபி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சியின் எம்பி ராம் கோபால் யாதவ், திமுக எம்பி திருச்சி சிவா, சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
வேட்புமனு தாக்கலுக்கு முன் பேசிய சுதர்சன் ரெட்டி, “போதிய எண்ணிக்கை உள்ளதா என்ற கேள்வி தொடர்கிறது. எனினும், நம்பிக்கை உள்ளது. நான் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. எனவே, ஒவ்வொருவரும் எனக்கு ஆதரவு அளிக்க முடியும் என நம்புகிறேன். நேற்றே ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்திவிட்டேன். இது ஒரு சித்தாந்த போர். இன்றைய நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அது மிகவும் எளிமையானது. தேர்தல் நடத்தும் அதிகாரியை சந்திக்கிறேன். வேட்புமனு தாக்கல் செய்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
தேர்தல் நடைமுறைகள்: குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. 21-ம் தேதிக்குள் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். மனுக்கள் பரிசீலனை 22-ம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற ஆகஸ்ட் 25-ம் தேதி கடைசி நாள். ஒரு வேட்பாளரை குறைந்தபட்சம் 20 எம்.பி.க்கள் முன்மொழிய வேண்டும். மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும்.
சி.பி.ஆர் வெற்றி பெறுவது உறுதி: தற்போது மக்களவையில் ஒரு எம்.பி., மாநிலங்களவையில் 5 எம்.பி.க்கள் இடங்கள் காலியாக உள்ளன. எனவே, வரும் தேர்தலில் 782 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தலில் வெற்றி பெற 50 சதவீத எம்.பி.க்களின் ஆதரவு தேவை. இதன்படி, 391 எம்.பி.க்களின் ஆதரவை பெறும்வேட்பாளர், புதிய குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்படுவார்.
நாடாளுமன்றத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 422 எம்.பி.க்களும், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கு 312 எம்.பி.க்களும் உள்ளனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், அந்த கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.