புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஆக. 22) பிஹார் மற்றும் மே.வங்கத்தில் பயணம் மேற்கொள்கிறார். அப்போது ரூ.18,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது இரு மாநிலப் பயணத்தை பிஹாரில் தொடங்குகிறார். கயாவில் காலை 11 மணிக்கு தொடங்கும் விழாவில் பங்கேற்கும் அவர் ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.
இதையடுத்து மேற்கு வங்கம் செல்லும் அவர் கொல்கத்தாவில் மாலை 4.15 மணிக்கு தொடங்கும் விழாவில் பங்கேற்கிறார். அங்கு ரூ.5,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இரு மாநிலங்களிலும் பொது மக்களிடையே பிரதமர் உரையாற்றுகிறார்.
8.15 கி.மீ. நீளத்துக்கு பாலம்: பிரதமரின் பிஹார் பயணத்தில் போக்குவரத்து இணைப்பு, மின்சாரம், சுகாதாரம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட உள்ளன. பாட்னா மாவட்டம் மொகாமாவில் இருந்து பெகுசராய் மாவட்டத்துக்கு நேரடி இணைப்பை ஏற்படுத்தும் வகையில் ரூ.1,870 கோடி செலவில் 8.15 கி.மீ. தொலைவுக்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. கங்கை ஆற்றில் 1.86 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்ட 6 வழிப் பாலமும் இதில் அடங்கும்.
இந்த சாலை உட்பட பல்வேறு திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு பிரதமர் திறந்து வைக்கிறார். கயா – டெல்லி இடையிலான அம்ரித் பாரத் ரயில் உட்பட 2 ரயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 13.61 கி.மீ. தொலைவிலான 3 மெட்ரோ ரயில் பாதைகள் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். ரூ.1,200 கோடி செலவிலான 7.2 கி.மீ. நீள 6 வழி உயர்மட்ட சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.