திமுக ஆட்சி அமையும் போதெல்லாம், அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் அத்தகைய மகிழ்ச்சி உள்ளதா என்பது கேள்விக்குறிதான். அரசு ஊழியர்களின் அதிருப்திப் போக்கு 2026 தேர்தலில் திமுகவுக்கு பாதிப்பை உருவாக்குமா என்று பார்ப்போம்.
கருணாநிதி ஆட்சி அமையும்போதெல்லாம் அரசு ஊழியர்கள் அகமகிழ்ந்து போவார்கள். தனது ஆட்சிக் காலத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அவர் தந்தார். இதன் காரணமாக எப்போதுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பெரும்பான்மை ஆதரவு திமுகவுக்கே உண்டு.
அதே நம்பிக்கையில்தான் 2021-ஆம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மை அரசு ஊழியர்கள் திமுகவை ஆதரித்தனர். திமுகவும் தனது தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அதே சூட்டோடு ஆட்சிக் கட்டிலிலும் அமர்ந்தார் மு.க.ஸ்டாலின்.
திமுக ஆட்சி கிட்டத்திட்ட நான்கரை ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அரசு ஊழியர்கள் இப்போது மகிழ்ச்சியாக உள்ளனரா என்பதற்கான பதில், வாரம்தோறும் நடைபெறும் போராட்டங்களில்தான் உள்ளது.
அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், மின்வாரிய ஊழியர்கள், ரேஷன் ஊழியர்கள், டாஸ்மாக் ஊழியர்கள் என பல்வேறு தரப்பு ஊழியர்களும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு ஊழியர்கள் மட்டுமின்றி ஓய்வுபெற்றோரும் தங்களுக்கான பணப் பலன்கள் இன்னும் கிடைக்கவில்லை, முறையாக அகவிலைப்படி வழங்கப்படுவதில்லை என்று போராடி வருகின்றனர்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவோம் என்று தெரிவித்தது. எனவே, திமுக தன்னுடைய தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
பழைய ஓய்வூதிய திட்ட விவகாரத்தில் அரசு ஊழியர்களின் அழுத்தம் அதிகரித்த நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய 3 ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது தமிழக அரசு.
இந்த குழு தன்னுடைய அறிக்கையை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே இதுகுறித்து இருமுறை குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில், இது கண் துடைப்பு நடவடிக்கை என்று பல அரசு ஊழியர் சங்கங்களும் சொல்கின்றன.
கடந்த அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர் சங்கங்கள் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தது. அப்போதெல்லாம், எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும் அவற்றில் முழுமையாக பங்கெடுத்தது. ஆனால், இப்போது அங்கொன்றும், இங்கொன்றும் போராட்டங்கள் நடந்தாலும், காத்திரமான போராட்டங்கள் நடப்பதில்லை. இதற்கு காரணம், பல்வேறு முக்கிய அரசு ஊழியர் சங்கங்கள் திமுக மற்றும் இடதுசாரிகள் சார்புடையவை. எனவே அவர்கள் வலுவான போராட்டத்தை முன்னெடுக்க தயங்குகின்றனர் என்கிறார்கள் சில அரசு ஊழியர் சங்கத்தினர்.
இதுகுறித்து பேசிய சிபிஎஸ் ஒழிப்பு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் எங்கெல்ஸ் கூறும்போது, “தமிழக அரசில் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் அரசு ஊழியர், ஆசிரியர்களில் 1,98,331 பேர் பழைய ஓய்வூதிய திட்டத்திலும், 6,24,140 பேர் புதிய ஓய்வூதியதிட்டத்திலும் உள்ளனர். சிபிஎஸ் திட்டத்தில் கடந்த மார்ச் 31-ம் தேதிவரை 45,625 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். 7,864 பேர் பணியின்போது உயிரிழந்துவிட்டனர்.
2003-க்குப் பின் பணியில் சேர்ந்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை எதுவும் கிடையாது. இதர மாநிலங்களில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஓய்வுபெறும் நாளில் இருப்பில் உள்ள 40 சதவீத தொகைக்கு சந்தை மதிப்புக்கு ஏற்ப ஓய்வூதியம் கிடைக்கும். பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் உண்டு.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் கோரிக்கையை நிறைவேற்றாமல் இருப்பது நியாயமல்ல. அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். எங்களுக்கு தேவை வாக்குறுதி அல்ல, பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான அரசாணைதான் வேண்டும்” என்றார்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணை பொதுச் செயலாளர் கோ.நாகராஜன் கூறும்போது, “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் வாக்குறுதி மட்டும் கொடுத்து வென்றுவிடலாம் என்று கருதினால், நிச்சயம் ஏமாந்து போவார்கள். எனவே, இந்த ஆட்சிக் காலத்திலேயே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் வரும் தேர்தலின்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நம்பிக்கையை பெற முடியாது” என்றார். பெரும்பாலான அரசு ஊழியர்களின் மனநிலையும் இதுவாகவே இருக்கிறது என்கின்றனர் சங்கத்தினர். தேர்தல் களத்தில் அரசு ஊழியர்களின் வாக்கு வங்கி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.
ஏனென்றால், தமிழகத்தில் சுமார் 10 லட்சம் அரசு ஊழியர்களும், சுமார் 8 லட்சம் ஓய்வூதியர்களும் உள்ளனர். இந்த 18 லட்சம் பேர் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினர் வாக்குகள் என சுமார் 40 லட்சம் முதல் 50 லட்சம் பேரின் வாக்குகள் இவர்களிடம் உள்ளது.
அரசு ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர் வாக்குகள் மட்டுமின்றி, பொதுத்தள வாக்காளர்களிடையேயும் இவர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். எனவே, ஆட்சி மாற்றத்தும், ஆட்சியை தக்கவைக்கவும் அடித்தளம் இடுவதில் முதன்மையானவற்றில் ஒன்றுதான் அரசு ஊழியர்களின் வாக்குகள்.
அந்தவகையில், தற்போதைய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மனநிலை அத்தனை திருப்தியாக உள்ளதா என்பது சந்தேகம்தான். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அவர்களின் நம்பிக்கையை திமுக அரசு வென்றெடுக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.