புதுடெல்லி: முப்பது நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கும் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்களை பதவி நீக்க வழிவகை செய்யும் மசோதாவை மக்களவையில் நேற்று மத்திய அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். அப்போது நடந்த விவாதத்தில் காங்கிரஸ் பொதுச் செயலரும், எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் கலந்துகொண்டு பேசும்போது, “இந்த மசோதா அரசியலில் ஒழுக்கத்தைக் கொண்டு வருவதற்காகவே என்று பாஜக தலைவர்கள் கூறுகின்றனர்.
நான் இப்போது உள்துறை அமைச்சரிடம் ஒரு கேள்வியை வைக்கிறேன். 2010-ல் அவர் குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்தபோது கைது செய்யப்பட்டார். அந்த நேரத்தில் அவர் ஒழுக்கத்தை நிலைநாட்டினாரா?” என்றார். அப்போது மத்திய அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “என் மீது கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன்.
அவையில் இந்த விஷயத்தை நான் தெளிவாக்குகிறேன். அப்போது என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. அதேநேரத்தில் குற்றச்சாட்டுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று நான் கைதாவதற்கு முன்னதாகவே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன். இந்த வழக்குகளிலிருந்து விடுதலை செய்யப்படும் வரை நான் எந்தப் பதவியையும் ஏற்றுக்கொள்ளவில்லை’’ என்று ஆவேசமாக பேசினார்.