புதுடெல்லி: இந்திய மியூச்சுவல் பண்ட் சங்கம் (ஏஎம்எப்ஐ), இந்தியா போஸ்ட் ஆகியவை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதன்மூலம் நாட்டில் ஒரு லட்சம் தபால்காரர்களுக்கு மியூச்சுவல் பண்ட் தொடர்பான பயிற்சி அளித்து அதில் பொதுமக்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன்படி பயிற்சியைப் பெறும் தபால்காரர்கள், மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்கள் என்று அழைக்கப்படுவர்.
இதன்மூலம் அவர்கள் நாட்டிலுள்ள சிறிய நகரங்கள், கிராமப்புறப் பகுதிகளில் மியூச்சுவல் பண்ட் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அந்தத் திட்டத்தில் மக்களைச் சேர்க்கும் பணிகளைச் செய்வர்.
இதுகுறித்து ஏஎம்எப்ஐ அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி வெங்கட் நாகேஸ்வர் சலசானி கூறும்போது, “ஒரு லட்சம் தபால்காரர்களுக்கு மியூச்சுவல் பண்ட் தொடர்பான பயிற்சி அளிக்கப்படும். இதைத் தொடர்ந்து 4 மாநிலங்களைத் தேர்வு செய்து அதிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 10 மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்கள் நியமனம் செய்யப்படுவர். அடுத்த ஆண்டில் அந்த மாநிலங்களின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்கள் இருப்பர்’’ என்றார்.
பிஹார், ஆந்திரா, ஒடிசா, மேகாலயா ஆகிய 4 மாநிலங்களில் முதல்கட்டமாக இந்தத் திட்டம் அமல் செய்யப்படும். 4 மாநிலங்களில் மொத்தம் 20,000 மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்கள் இருப்பர். இந்தத் தபால்காரர்களுக்கு கூடுதலாக பயிற்சி தேவைப்பட்டால், உதவி செய்ய சான்றிதழ் பெற்ற மியூச்சுவல் பண்ட் நிபுணர்கள் குழு அமைக்கப்படும்.