புதுடெல்லி: கடந்த 1975 முதல் 1977 வரையிலான அவசரநிலை காலத்தில் அப்போதைய இந்திரா காந்தி அரசின் அத்துமீறல்கள், முறைகேடுகள் குறித்து நீதிபதி ஷா ஆணையம் விசாரணை மேற்கொண்டது. அதன் அறிக்கை நாடாளுமன்றத்தில் 1978-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்தியதில் பலத்தை பிரயோகித்தது குறித்தும் அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரத்தை மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பகிர்ந்து கொண்டார்.
இது தொடர்பாக அவர் எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: அவசரநிலை காலத்தில் 1.07 கோடிக்கும் மேற்பட்டோருக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, இது அப்போதைய இந்திரா காந்தி அரசு நிர்ணயித்த இலக்கை விட 60% அதிகமாகும்.
அப்போது குடும்பக் கட்டுப்பாடு தொடர்பாக 1,774 பேர் இறந்துள்ளனர். திருமணமாகாதவர்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டதாக 548 புகார்கள் வந்துள்ளன.
அவசரநிலை காலத்தில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்துக்கு ஆண்டு இலக்குகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்தது. 1975-76-ல் 24.8 லட்சம் அறுவை சிகிச்சைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் 5.6% கூடுதலாக, அதாவது 26.2 லட்சம் பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுபோல் 1976-77-ல் 42.5 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 91% அதிகமாக (81.3 லட்சம்) அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இவ்வாறு அமைச்சர் தனது பதிலில் கூறியுள்ளார்.