சென்னை: இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் 77 சதவீதம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன், தொழில்துறை செயலர் அருண்ராய் இருந்தார். அப்போது அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தை நோக்கி நாள்தோறும் பல்வேறு திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி கொண்டிருக்கின்றன. எந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானாலும், அதன் பின்னால் எவ்வளவு முதலீடுகள் வருகிறது என்பதை பார்ப்பதைவிட, எத்தனை நபருக்கு வேலைவாய்ப்புகள் உருவா
கிறது என்பதை பார்க்க வேண்டும்.
கையெழுத்தாகும் ஒப்பந்தங்கள் செயலர்கள் அடங்கிய கமிட்டி மூலம் கண்காணிக்கப்பட்டு, அதற்கான அனுமதிகள் உடனுக்குடன் வழங்கப்படுவதால் தமிழகம் தற்போது வரலாற்று சிறப்புமிக்க கன்வெர்சன் ரேட்டை பெற்று வருகிறது. கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது இந்தியாவில் எந்த பகுதியும் காணாத அளவு 72 சதவீதம் செயல்பாட்டு அளவை (கன்வர்சன் ரேட்) தமிழகம் பெற்றுள்ளதாக தெரிவித்தேன்.
இந்நிலையில் தற்போது புதிய உச்சமாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் செயல்பாட்டு அளவு தமிழகத்தில் 75 சதவீதத்தை தாண்டியிருக்கிறது. இதுவரை இந்தியாவில் எந்தவொரு மாநிலமும் அடையாத ஒரு இலக்காகும் இது. கடந்த 2024-ல் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் மட்டும் நாம்கையெழுத்திட்ட 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 525 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அதாவது 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
தொடர்ந்து ‘தமிழ்நாடு எழுகிறது’ என்ற மாநாடுகளை மண்டலவாரியாக நடத்தி வருகின்றோம். அதன்படி சமீபத்தில் தூத்துக்குடியில் நடந்த மாநாட்டில் மட்டும் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.32,554 கோடி முதலீடுகள், 49,825 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. அடுத்ததாக ஓசூரில் ‘தமிழகம் எழுகிறது’ மாநாடு நடத்தப்படவுள்ளது.
அந்தவகையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2021-ல் இருந்து 2025 வரை ரூ.10.33 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 77 சதவீத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. செயல்பாட்டு அளவுக்குப்பின் கிடைக்கும் முதலீடுகளிலிருந்து வரும் வேலைவாய்ப்புகளும் நமது மக்களுக்கே கிடைப்பதற்கான நடவடிக்கையையும் தொடர்ந்து எடுத்து வருகிறோம். மதுரையில் கூட டைடல் பூங்கா கட்டுமான பணிகள் முடிந்தபிறகு மேலும் வளர்ச்சியடையும். தமிழகத்தின் போட்டி மாற்ற மாநிலங்களோடு இல்லை. மற்ற நாடுகளோடுதான். இவ்வாறு அவர் கூறினார்.