திண்டுக்கல் / தென்காசி: திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் ஆகிய இடங்களில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கொடைக்கானலில் பிரியாணி கடை நடத்திவந்த இம்தாலுல்லா என்பவர் கைது செய்யப்பட்டார். இதேபோல, தென்காசியிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் 2019 பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். மதமாற்றம் செய்வதை ராமலிங்கம் கண்டித்ததே கொலைக்கான காரணம் என்று தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டு. விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 18 பேர் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 5 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் பதுங்கியிருந்த முகமது அலி என்பவரை கடந்த ஆண்டு என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்நிலையில், திண்டுக்கல், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் சந்தேகத்துக்கிடமானவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். திண்டுக்கல் பேகம்பூர் ஜின்னா நகரில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டப் பொருளாளர் ஷேக் அப்துல்லா வீடு உள்ளது. இங்கு நேற்று காலை 6.15 மணிக்கு வந்த என்ஐஏ அதிகாரிகள் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனை நடைபெறுவதை அறிந்த எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஷேக் அப்துல்லா வீட்டின் முன் திரண்டு, என்ஐஏ சோதனையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல, வத்தலக்குண்டு காந்திநகரில் உள்ள உமர் என்பவர் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற சோதனை 2 மணி நேரம் நடந்தது. ஒட்டன்சத்திரம் சும்சுதீன் காலனியைச் சேர்ந்த எலெக்ட்ரீஷியன் முகமது யாசின் வீட்டிலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கொடைக்கானலில் பிரியாணி கடை நடத்தி வரும் இம்தாதுல்லா (40) என்பவரின் வீடு, கடை மற்றும் பூம்பாறையில் உள்ள அவருக்குச் சொந்தமான இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். ஏறத்தாழ 6 மணி நேர விசாரணைக்குப் பிறகு இம்தாதுல்லாவை கைது செய்து, அழைத்து சென்றனர்.
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா: தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்புடையவர் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
கடையநல்லூர் பேட்டை புது மனை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முகமது அலி. இவரது வீட்டில் நேற்று காலை 6.30 மணிக்கு வந்த என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையொட்டி, அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த சோதனை 9.40 மணி வரை நடைபெற்றது.
தடை செய்யப்பட்ட இயக்கமான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முகமது அலி இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். முகமது அலியின் வீட்டிலிருந்த அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.