புதுடெல்லி: பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருந்தாலே, அவர்களை பதவி நீக்கம் செய்ய வழிவகை செய்யும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
மக்களவையில் நேற்று 130-வது திருத்த அரசியலமைப்பு மசோதா, யூனியன் பிரதேச அரசு (திருத்த) மசோதா, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களை மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று தாக்கல் செய்தார்.
ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019-ன் பிரிவு 54-ல் திருத்தம் மேற்கொள்வதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் முதல்வர் அல்லது அமைச்சர் தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால், அவரை பதவி நீக்கம் செய்ய இந்த மசோதா வழிவகை செய்கிறது.
கடும் குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் முதல்வர் அல்லது அமைச்சரை பதவி நீக்கம் செய்வதற்கு ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தில் எந்த ஏற்பாடும் இல்லை என்பதால், இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இந்த மசோதாவின்படி, ஓர் அமைச்சர் ஊழல் அல்லது கடும் குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு 30 நாட்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டாலோ, 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றங்களில் ஈடுபட்டிருந்தாலோ 31-வது நாள் முதல்வரின் பரிந்துரையின் பேரில், அவரை அமைச்சரவையில் இருந்து மாநில ஆளுநர் நீக்க வேண்டும். ஒருவேளை ஆளுநருக்கு பரிந்துரை செய்யவில்லை என்றால், தானாகவே 31-ம் நாளில் அவர் பதவியை இழந்து விடுவார்.
இதேபோல, பிரதமர் அல்லது முதல்வர் தொடர்ந்து 30 நாட்களுக்கு சிறைக் காவலில் இருந்தால், அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், தண்டனைக் காலம் குறைந்தது 5 ஆண்டுகள் என்று இருந்தால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் 31-வது நாளில் இருந்து அவர் முதல்வர் பதவியை இழப்பார்.
காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், பிரதமர், முதல்வர் அல்லது அமைச்சர்களை துணைநிலை ஆளுநர் பதவி நியமனம் செய்யும்போது, அதைத் தடுக்க உட்பிரிவு எதுவும் இதில் இல்லை என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அமித் ஷா தெரிவித்தார்.
குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்களுக்காக கைது செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்த புதிய மசோதா பொருந்தும். இதன் மூலம் கொலை, பெரிய அளவிலான ஊழல் போன்ற கடும் குற்றங்கள் இந்த சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்படும்.
இந்த புதிய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் பேசிய ஏஐஎம்ஐஎம் உறுப்பினர் அசாதுதின் ஓவைசி, “மக்களவையில் இந்த மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படுவதை நான் எதிர்க்கிறேன். இது தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசுக்கு உள்ள அதிகாரத்தை குறை மதிப்புக்கு உள்ளாக்குகிறது.
அற்பமான குற்றச்சாட்டுகள் மற்றும் சந்தேகங்களின் அடிப்படையில், நிர்வாக அமைப்புகள் நீதிபதியாகவும். தண்டிப்பவராகவும் மாற இது வழிவகை செய்கிறது. காவல் அரசை உருவாக்குவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மீது அடிக்கப்படும் மரண ஆணி. இந்த நாட்டை காவல் அரசாக மாற்றுவதற்காக, இந்திய அரசியலமைப்பு திருத்தப்படுகிறது” என்றார்.
அமித் ஷா மீது நகல்கள் வீச்சு: தொடர்ந்து, அவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மசோதா வுக்கு எதிராக கோஷமெழுப்பினர். மேலும், அவையில் இருந்த எதிர்க்ட்சி எம்.பி.க்கள் மசோதாக்களின் நகல்களை கிழித்து அமித் ஷாவை நோக்கி வீசி எறிந்தனர். இதனால் அவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.