புதுடெல்லி: “குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, நாட்டின் அரியலமைப்பின் மீது மிகப் பெரிய நம்பிக்கை வைத்திருப்பவர். சித்தாந்த ரீதியாக இணையான பார்வையை கொண்டிருப்பவர்” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி நேற்று (ஆக.19) அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அவரை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக எம்பி திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “நாட்டில் இன்று, அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கும் அதை பாதுகாப்பவர்களுக்கும் இடையே போர், சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டி பல ஆண்டு காலம் நீதித்துறை மற்றும் சட்ட அனுபவம் கொண்டவர். அரசியலமைப்பின் விழுமியங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு பிரபலமானவர்.
தெலங்கானாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதிலும் தெலங்கானாவில் சமூக நீதிக்கான பார்வையை உருவாக்குவதிலும் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். நான் தற்செயலாக பார்த்தபோது அவரது சட்டைப் பையில் இந்திய அரசியலமைப்பின் நகல் இருந்தது. 52 ஆண்டுகளாக அதைத்தான் தன்னுடனேயே வைத்திருப்பதாக அவர் என்னிடம் கூறினார். அதற்கான காரணம் குறித்து கேட்டபோது, அனைத்து சட்ட விவாதங்களுக்குமான பதிலை அளிப்பது அரசியலமைப்புதான் என அவர் பதிலளித்தார். அவர் பரந்த அனுபவமும், புத்திசாலித்தனமும் கொண்டவர் என்பதோடு, சித்தாந்த ரீதியாகவும் நம்மோடு இணைந்து இருப்பவர்.
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா குறித்த சத்தம் அதிகம் கேட்கிறது. மன்னர் தனது விருப்பப்படி, தனக்குப் பிடிக்காதவர்களை வெளியேற்ற திட்டமிடுகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரை, 30 நாட்கள் சிறையில் அடைத்து அவரது பதவியையும் பறிக்க திட்டமிடுகிறார். நாம் மீண்டும் பழங்காலத்துக்கு திரும்புவதைப் போன்றது இது.
தற்போது ஏன் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது? குடியரசு துணைத் தலைவராக இருந்த அந்த நபர் எங்கே போனார்? அவர் ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறார்? மக்களவையில் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக உரத்த குரலில் பேசிய அவர் திடீரென மவுனமானது ஏன்? ஒரே ஒரு வார்த்தைகூட அவரிடமிருந்து வரவில்லையே ஏன்?
பிஹாரில் வாக்காளர் உரிமை பயணம் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் அங்கு தீயைப் போல பற்றி எரிகிறது. சிறுவர்கள்கூட தற்போது இதுபற்றி பேசத் தொடங்கிவிட்டார்கள். உண்மையில் இந்த நாட்டின் ஆன்மா எதையும் மிக விரைவாகப் புரிந்து கொள்கிறது.
பல மாநிலங்களில் வாக்குகள் திருடப்பட்டு தற்போது பிஹாரிலும் அதற்கான முயற்சி நடப்பதை மக்கள் அறிந்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தின் ஆழத்தை நேரில் காண, மூத்த தலைவர்கள் பிஹாருக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்.
இந்தியா குறித்த மாற்றுப் பார்வையை, மாற்றுக் கருத்தை வழங்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது ஒரு பெரிய பொறுப்பு. 10-15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போன்ற ஒரு பொறுப்பு அல்ல இது. அப்போது இருந்த அமைப்பு நடைமுறை தற்போது இல்லை.
ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், ஒவ்வொரு மொழியில் இருந்தும், ஒவ்வொரு கலாச்சாரத்தில் இருந்தும் நம்மிடம் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். இத்தகைய தலைமைப் பண்புகள் உள்ளவர்களை பெற்றிருப்பதற்காக நாம் பெருமைப்பட வேண்டும்.
குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக போட்டியிடும் சுதர்சன் ரெட்டியை நாம் ஆதரிக்கிறோம். ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நாம் அவரை ஆதரிக்கிறோம். ஒருமனதமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது முக்கியமானது. அவர் உறுதியுடன் இந்த தேர்தலை எதிர்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. இதன்மூலம், நாம் வழங்கும் செய்தியை நாடு அறியும்” என தெரிவித்தார்.