திருநெல்வேலி: தவெக மாநாடு அரசியலில் எவ்வித திருப்புமுனையையும் ஏற்படுத்தாது என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார்.
பாளையங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சட்டப் பேரவை தலைவர் அப்பாவு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், தூய்மைப் பணியாளர் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுமுகச்சாமி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமார் ஆகியோர் ஒண்டிவீரன் மணிமண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சட்டப் பேரவை தலைவர் அப்பாவு கூறியது: “இந்திய சுதந்திரத்துக்காக போராடிய ஒண்டிவீரனின் வீரத்தையும், தியாகத்தையும் நாம் நினைவுகூராமல் இருக்க முடியாது. அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பாளையங்கோட்டையில் மணிமண்டபம் கட்டிக் கொடுத்ததுடன், அவர் சார்ந்த சமூக மக்களுக்கு மூன்றரை சதவீத இடஒதுக்கீடு அளித்து பெருமை சேர்த்தார். அவர் வழியில் இன்றைய முதல்வரும் செயல்பட்டு வருகிறார்.
மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு அவர்களுக்கு வேண்டுமென்றால் திருப்புமுனையை ஏற்படுத்தும். நாட்டுக்கும், அரசியலிலும் எவ்வித திருப்புமுனையையும் ஏற்படுத்தாது. தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பிரச்சாரத்தில் ஆம்புலன்ஸை அனுப்பி பிரச்சினை செய்யும் அளவிலான நிலை தமிழகத்தில் இல்லை. அதுபோன்ற நடவடிக்கைகளை அரசு ஒருபோதும் எடுக்காது. நோயாளிகளை அழைப்பதற்காக ஆம்புலன்ஸ் செல்லும். எப்போதும் நோயாளிகளுடன் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
30 நாட்கள் சிறையில் இருந்தால் முதல்வர், அமைச்சர்கள் போன்ற உயர் பதவியில் இருப்பவர்களின் பதவியை பறிக்கும் சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. தங்களுக்கு எதிரியாக நினைக்கக் கூடியவர்களை பழிவாங்கும் நோக்கில் மத்திய அரசு இச்சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
சி.பி ராதாகிருஷ்ணன் பண்பாளர், நல்ல நண்பர். ஆனால் அவர் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்டவர். அவர் குடியரசு துணைத் தலைவரானால் தமிழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேசுவாரா? தற்போது உள்ள அமைச்சர் எல்.முருகன் பேசுகிறாரா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகத்துக்கு வரவேண்டிய நிதிகளை பெற்று தருவாரா?
இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டியை திமுக ஆதரிக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு தீர்ப்புகளை அவர் வழங்கியுள்ளார். ஏழை, எளிய மக்களுக்கான பட்டா தொடர்பான விவகாரம், கோதாவரி கிருஷ்ணா ஆற்றுப்படுகையில் கேஸ் எடுப்பது தொடர்பான தீர்ப்பு , இந்தியாவின் கருப்பு பணங்களை வெளிநாடுகளில் இருந்து மீட்பதற்கான சிறப்பு புலனாய்வு குழு கொண்டு வந்தது என பல்வேறு தீர்ப்புகளை அவர் வழங்கியுள்ளார்” என்று அப்பாவு தெரிவித்தார்.