புதுடெல்லி: “சிந்து நதி நீர் ஒப்பந்தத்தால், இந்தியாவுக்கு பலன் இல்லை என்பதை நேரு ஒப்புக் கொண்டார் ” என பிரதமர் மோடி கூறியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: பாகிஸ்தானுடன் செய்து கொண்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தால், இந்தியாவுக்கு எந்த பலனும் இல்லை என்பதை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவே ஒப்புக் கொண்டார் என கூறப்படுகிறது. நாட்டை, ஜவஹர்லால் நேரு இரண்டு முறை பிரித்துவிட்டார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லை வரையறுக்கபட்டபோது ஒரு முறையும், சிந்து நிதி நீர் ஒப்பந்தம் செய்த போது மறு முறையும் இந்த பிரிவினை நடைபெற்றது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் மூலம் 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் விவசாயிகளுக்கு எதிரானது. பிறகு இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு பலன் இல்லை என்பதை அவர் தனது செயலாளர் மூலம் ஒப்புக் கொண்டார். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
பாஜக தலைவர் ஜே.பி. நட்டா பேசுகையில், “கடந்த 1960-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம், முன்னாள் பிரதமர் நேரு செய்த மிகப் பெரிய தவறுகளில் ஒன்று. தனிப்பட்ட லட்சியங்களுக்காக நாட்டு நலனை விட்டுக் கொடுத்து விட்டார். நாடாளுமன்றத்தில் ஆலோசிக்காமல், நேரு இந்த முடிவை எடுத்தார். ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 2 மாதங்களுக்கு பின்னரே, இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பெயருக்கு 2 மணி நேரம் மட்டுமே விவாதம் நடைபெற்றது.
அப்போது நேருவின் முடிவுக்கு, இளம் எம்.பி.யாக இருந்த வாஜ்பாய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தனி மனிதனின் தவறான கொள்கைக்காக, நாடு இன்றும் விலை கொடுக்கிறது. காங்கிரஸ் செய்த வரலாற்று பிழையை, பிரதமர் மோடி தற்போது சரிசெய்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்துள்ளார் ” என்றார்.
பாஜக எம்.பி ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், “நாடாளுமன்ற அனுமதி பெறாமல் சிந்து நிதி நீர் ஒப்பந்தத்தில் மட்டும் நேரு கையெழுத்திடவில்லை. பாகிஸ்தானுக்கு ரூ.80 கோடி நிதியும் வழங்கினார். இந்த உண்மைகளை பிரதமர் எடுத்துரைத்த
தற்காக நாங்கள் பெருமிதம் அடைகிறோம்’’ என்றார்.