சென்னை: ஓபன் ஏஐ நிறுவனம் இந்தியாவில் ‘சாட்ஜிபிடி கோ’ என்ற புதிய கட்டண சந்தாவை அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்த சந்தா திட்டத்தின் மூலம் பயனர்கள் சாட்பாட் உடன் இலவசமாக பயன்படுத்துவதை காட்டிலும் 10 மடங்கு கூடுதலாக சாட்ஜிபிடி-யை பயன்படுத்த முடியும் என ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது. அந்த வகையில் மெசேஜ் மற்றும் இமேஜ் ஜெனரேஷன் என சாட்பாட்டை தடையின்றி பயனர்கள் பயன்படுத்தலாம். கட்டணம் செலுத்தாமல் சாட்ஜிபிடி-யை பயன்படுத்தும் போது குறிப்பிட்ட வரம்பு உள்ளது. அதை பயனர்கள் கடக்கும் போது தொடர்ந்து சாட்ஜிபிடி உடன் ‘சேட்’ செய்ய முடியாது.
தற்போது கட்டண சந்தா மூலம் அதை ஓபன் ஏஐ மாற்றி அமைத்துள்ளது. அந்த வகையில் இந்தியாவுக்கு என பிரத்யேகமாக ‘சாட்ஜிபிடி கோ’ என்ற மாதாந்திர கட்டண சந்தா அறிமுகமாகி உள்ளது. இதன் கட்டணம் மாதத்துக்கு ரூ.399 என அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் யுபிஐ மூலம் நேரடியாக கட்டணத்தை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் சாட்ஜிபிடி-யை பயன்படுத்துபவர்களில் இந்தியா தங்களது 2-வது பெரிய சந்தையாக அமைந்துள்ளது என ஓபன் ஏஐ கூறியுள்ளது. அதை கருத்தில் கொண்டே இந்த நகர்வை அந்நிறுவனம் கையில் எடுத்துள்ளது.
சாட்ஜிபிடி? – தொழில்நுட்ப சாதனங்களின் வழியே பயனர்களோடு உரையாடும் தன்மை கொண்ட சாட்பாட் தான் சாட்ஜிபிடி. இதனை ஓப்பன் ஏஐ நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்நிறுவனத்தை கடந்த 2015 வாக்கில் எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் மற்றும் சிலர் இணைந்து தொடங்கினர். இது செயற்கை நுண்ணறிவு பெற்ற பிளாட்பார்ம். இதில் பயனர்கள் கேட்கிற கேள்விகள் அனைத்திற்கும் விடை கிடைக்கும்.
கடந்த 2022-ம் ஆண்டின் இறுதியில் ஓபன் ஏஐ நிறுவனம் சாட்-ஜிபிடி ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட்டை பொது பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்தது. அது டிஜிட்டல் பயனர்கள் மத்தியில் அதீத வரவேற்பைப் பெற்றது. கிட்டத்தட்ட ஜெனரேட்டிவ் ஏஐ பயன்பாடு சார்ந்த புரட்சியை அது ஏற்படுத்தியது. கதையைச் சொல்ல, கட்டுரை படிக்க, பாடல் எழுத என பயனர்கள் கேட்கும் சகல கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கும் இதில் பதில் கிடைக்கும். இதன் மூலம் படங்களையும் ஜெனரேட் செய்யலாம்.