சென்னை: உள்நாட்டு அலுமினிய உற்பத்தி நிறுவனங்களைப் பாதுகாக்க, வெளிநாடுகளில் இருந்து மலிவான விலையில், தரம் குறைந்த அலுமினியப் பொருட்கள் இறக்குமதியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு, இந்திய அலுமினிய உருக்கு உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்திஉள்ளது.
இது தொடர்பாக, இந்திய அலுமினிய உருக்கு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஜிதேந்திர சோப்ரா சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நாம் தினமும் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை அலுமினிய பொருளைப் பயன்படுத்துகிறோம். படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை, கதவு என ஒவ்வொன்றிலும் அலுமினியப் பொருட்கள் உள்ளன.
ஸ்கூட்டர், கார், மெட்ரோ ரயில், பேருந்து, ராக்கெட் வரை எல்லாவற்றிலும் அலுமினியப் பொருள் உள்ளது. இந்தியாவின் அலுமினிய உருக்கு சந்தை சீராக விரிவடைந்து வருகிறது. கடந்த ஆண்டில் 8.39 பில்லியன் டாலரில் இருந்த இந்திய சந்தை 2035-ல் 22.5 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சீனா, வியட்நாம், கம்போடியா, இந்தோனேசியாவில் இருந்து குறைந்த தரத்தில், மலிவான விலையில் அலுமினியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. நமது உள்நாட்டு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாக்க, அலுமினிய இறக்குமதியை நிறுத்த வேண்டும்.
இதுதவிர, மூலப் பொருட்களின் விலையும் இந்தியாவில் மிக அதிகமாக இருக்கிறது. இதையும் குறைக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் உட்பட இந்தியப் பொருள்களுக்கு 50 சதவீதம் வரியை அமெரிக்கா விதித்துள்ளது. தனிநபர் அலுமினியம் நுகர்வு சீனாவில் 25 முதல் 30 கிலோவும், அமெரிக்காவில் 22 முதல் 25 கிலோவும் உள்ளது.
ஆனால், இந்தியாவில் நுகர்வு குறைவாக உள்ளது. எனவே, உள்நாட்டு அலுமினியப் பயன்பாட்டை அதிகரிக்க அரசு ஆதரவளிக்க வேண்டும். இதற்கு உள்நாட்டு நிறுவனங்களை ஆதரிக்க வேண்டும். இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். நாட்டின் மொத்த உற்பத்தி அதிகரிக்கும். டெல்லியில் செப். 10 முதல் 13-ம் தேதி வரை அலுமினிய உருக்கு கண்காட்சி நடைபெற உள்ளது. அங்கு 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இவற்றை பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.