திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தை சேர்ந்த விஸ்வநாத் குடும்பத்தினருக்கு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து தருவதாக கூறி, நடராஜ் நரேந்திர குமார் மற்றும் நடராஜ் சர்மா ஆகியோர் ரூ.90 ஆயிரம் பெற்றுள்ளனர். அதன் பிறகு பணத்தை கேட்கும்போதெல்லாம் ஏதாவது காரணத்தை கூறி ஏமாற்றி உள்ளனர்.
இதுதொடர்பாக விஸ்வநாத் குடும்பத்தினர் திருமலை விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். விசாரணையில், பணத்தை பெற்ற இருவரும் திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இருவரும் 15-க்கும் மேற்பட்ட பக்தர்களை ஏமாற்றி பணம் பறித்திருப்பதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து இருவர் மீதும் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பக்தர்கள் யாரும் போலி தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டாம். தரிசனத்துக்கோ அல்லது தங்கும் அறைகளுக்கோ இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.