துணை ஜனாதிபதி தேர்தலில், என்டிஏ கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிவித்திருப்பதன் மூலம் திமுக-வுக்கும் அக்னிப் பரீட்சை வைத்திருக்கிறது பாஜக.
பாஜக உடன் கூட்டணி வைக்கவே மாட்டோம் என முறுக்கிக் கொண்டு நின்ற அதிமுக-வை அதிரடியாக ‘வழிக்கு’ கொண்டு வந்து, முதல் கோல் அடித்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா. இந்த இணைப்புக்காக, துடிப்பான தங்களது மாநிலத் தலைவர் அண்ணாமலையைக் கூட பதவியை விட்டு தூக்கியது பாஜக.
அண்ணாமலை மாற்றத்தால் தமிழகத்தில் பாஜக-வின் பழைய செல்வாக்கு சரிந்து போனதாக சர்வே தகவல்கள் சொல்லப்பட்டாலும் அதிமுக உடன் இருப்பதால் அந்த சரிவை எல்லாம் சமாளித்துவிடலாம் என மனக்கோட்டை கட்டுகிறது பாஜக தலைமை. இதனால், பழனிசாமி கொடுத்த அழுத்தத்தால் அண்ணாமலையை மாற்றிவிட்டார்களே என்ற ஆதங்கத்தில் சைலன்ட் மோடுக்குப் போய்விட்ட அவரது ஆதரவாளர்கள், பாஜக-வை விட்டுவிட்டு, அண்ணாமலை பெயரில் பேரவை, ஆர்மி என தனி ஆவர்த்தனம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
இவற்றை எல்லாம் அண்ணாமலை ஊக்குவிக்காவிட்டாலும், தடுக்கவும் இல்லை. அதிமுக-வுடன் இணக்கமாக இருப்பது போன்று, பத்திரிகையாளர் சந்திப்புகளில் ஒப்புக்காக நடிக்கக்கூட அவர் தயாராக இல்லை. மறுபுறத்தில், இபிஎஸ் கோவையில் தனது பிரச்சார பயணத்தை தொடங்கிய போது, அந்த மேடையில் அண்ணாமலையும் இருந்திருந்தால் எழுச்சி வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்பது அதிமுக முன்னாள் அமைச்சர்களின் கருத்தாக உள்ளது. ஆனாலும் இதுகுறித்து அவர்கள் வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள்.
துடிப்பான இளம் அரசியல்வாதியான அண்ணாமலையை பாஜக புறக்கணித்தது, கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக உள்ள கவுண்டர் சமுதாய மக்களிடமும் மனப்புழுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தான் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரும் அண்ணாமலையின் கவுண்டர் சமூகத்தவருமான சிபிஆரை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருக்கிறது பாஜக.
இதன் மூலம் தமிழகத்தின் மீதான தங்கள் கரிசனத்தை மீண்டும் படம்பிடித்துக் காட்டி இருக்கும் பாஜக, அண்ணாமலை மாற்றத்தால் கொங்கு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள அதிருப்தி அலையை அதே மண்டலத்தைச் சேர்ந்த சிபிஆரை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருப்பதன் மூலம் சரி செய்யவும் பார்த்திருக்கிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
அதேசமயம், சிபிஆரை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருப்பதன் மூலம், திமுக-வுக்கும் அக்னிப் பரீட்சை வைத்திருக்கிறது பாஜக. இதுகுறித்து பாஜக தரப்பிலிருந்து நம்மிடம் பேசியவர்கள், “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஆர்.வெங்கட்ராமனுக்கு பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பச்சைத் தமிழனை வேட்பாளராக பாஜக நிறுத்தி உள்ளது. கட்சி பேதங்களை கடந்து தமிழன் என்ற முறையில் திமுக-வும் அவரை ஆதரித்திருக்க வேண்டும்.
ஆனால் இதற்கு முன்பு, திராவிடரான சஞ்சீவி ரெட்டியை தவிர்த்துவிட்டு பிராமண சமூகத்தைச் சேர்ந்த வி.வி.கிரியை ஆதரித்த திமுக, இஸ்லாமியர்களின் பாதுகாவலன் என்று சொல்லிக்கொண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாமை ஆதரிக்காமல், பிரதீபா பாட்டீலை ஆதரித்தது.
அதேபோல் மலைவாழ் மக்களின் பிரதிநிதியான பி.ஏ.சங்மாவை விட்டுவிட்டு பிராமணரான பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவளித்த திமுக, பழங்குடி இனத்தவரான திரவுபதி முர்முவை விட்டுவிட்டு முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த யஸ்வந்த் சின்ஹாவை ஆதரித்தது. அதேபோல், இப்போதும் சுத்தத் தமிழரான சிபிஆரை ஒதுக்கிவிட்டு தெலங்கானாக்காரரை ஆதரிக்க முன்வந்திருப்பதன் மூலம் திமுக தனது இரட்டை வேடத்தை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது” என்றனர்.
சிபிஆரை ஆதரிக்கக் கோரி பாஜக தரப்பில் திமுக-விடம் பேசிய நிலையில், இண்டியா கூட்டணியின் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான பி.சுதர்ஷன் ரெட்டியை அறிவித்திருக்கிறார்கள். இதற்கு திமுக-வும் இசைவு தெரிவித்திருப்பதால் பிரச்சாரத்தில் இதையும் திமுக-வுக்கு எதிரான அஸ்திரமாக பாஜக திருப்பும். இந்த இக்கட்டை ஸ்டாலின் எப்படி சமாளிக்கிறார் என்று பார்க்கலாம்!