மதுரை: மதுரை பாரப்பத்தியில் நாளை நடக்கும் விஜய் கட்சியின் மாநில மாநாட்டுக்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. மாநாட்டு திடல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மதுரை-தூத்துக்குடி சாலையில் உள்ள பாரப்பத்தியில் தவெகவின் 2-வது மாநில மாநாடு நாளை (ஆக.21) நடக்கிறது.
சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் எல்இடி திரைகளுடன் கூடிய டிஜிட்டல் வடிவிலான மேடை, பார்வையாளர் கேலரிகள், வாகன பார்க்கிங், மாநாட்டு திடலை சுற்றிலும் கட்சிக் கொடி, தோரணங்கள், பதாகைகள், தற்காலிக கழிப்பறை, குடிநீர், மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், திடலைச் சுற்றிலும் வண்ண மின் விளக்குகள் என மாநாடுக்கான பல்வேறு ஏற்பாடுகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில், மதுரை மாவட்டச் செயலாளர்கள் கல்லாணை, தங்கப்பாண்டி உள்ளிட்டோர் மாநாட்டுப் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மாநாட்டுத் திடலை பார்வையிட்ட மதுரை எஸ்.பி. அரவிந்த், மாநாட்டுக்கான பாதுகாப்பு, நெரிசலை தவிர்க்கும் வழித்தடங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். மாநாட்டு பாதுகாப்பு பணியில் 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுகின்றனர்.