சென்னை: முன்னாள் படைவீரர்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்கான ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளையும் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க, கொட்டும் மழையிலும், குளிரிலும் தமது இன்னுயிரையும் பொருட்படுத்தாது தாய் நாட்டுக்காக தங்களது இளம் வயதை ராணுவப் பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன் காக்க பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
கடந்தாண்டு முதல்வர் ஸ்டாலின், தனது சுதந்திர தின உரையில் ‘‘தாய்நாட்டுக்காகத் தங்கள் இளம் வயதை ராணுவப் பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்கள் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்யவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்’’ என அறிவித்தார்.
அதன்படி, முதல்வர் ஸ்டாலின், நேற்று “முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தை தொடங்கி வைத்து, 155 முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை வழங்கும் அடையாளமாக, 15 பேருக்கு ஆணைகளை வழங்கினார். இத்திட்டத்தில், 155 பயனாளிகளுக்கான திட்ட செலவினமாக ரூ.24.43 கோடி, 30 சதவீதம் மானியத்துடன் வழங்கப்படும்.
இத்திட்டத்தின்கீழ் முன்னாள் படைவீரர்கள் சுயதொழிலில் ஈடுபடவும் சிறந்த தொழில் முனைவோராக மாற தேவையான நிதி மற்றும் பயிற்சிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தில் முதற்கட்டமாக 348 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பயனடைவர். இத்திட்டத்துக்கான மொத்த செலவினம் ரூ.50.50 கோடியாகும்.
இத்திட்டப்படி, முன்னாள் படைவீரர்கள் பல்வேறு தொழில் தொடங்குவதற்கு ரூ.1 கோடி வரை வங்கி மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டு, தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியம், 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ், முன்னாள் படைவீரர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை கூர்ந்தாய்வு செய்வதற்கு, மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்ட மாவட்ட அளவிளான தேர்வு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் ஒப்புதலின் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வங்கிக்கு தொழில் தொடங்க கடன் ஒப்புதல் வேண்டி பரிந்துரைக்கப்படுகிறது.
இவ்வங்கிகளால் மேலும் சீராய்வு செய்யப்பட்டு தற்காலிக ஒப்புதல் ஆணை வழங்கப்படும். தொழில் தொடங்குவதற்கான வங்கியின் தற்காலிக ஒப்புதல் பெற்றவர்களுக்கு அரசு செலவில் சென்னை-தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.
இறுதியாக தொழில் தொடங்குவதற்கு தேவைப்படும் கடனுதவி சம்பந்தப்பட்ட வங்கிகளால் கடன் இறுதி ஒப்பளிப்பு அளிக்கப்படும். வருங்காலங்களில் தமிழக அரசு, நிதி நிறுவனங்களுடன் இணைந்து 500 முன்னாள் படைவீரர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
நிகழ்ச்சியில், அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரீஷ் தாக்கர், முன்னாள் படைவீரர் நலத்துறை இயக்குநர் சஜ்ஜன்சிங் ரா சவான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.