சென்னை: ஓய்வூதியர் பணப்பலன் வழங்குவதற்காக ரூ.1,137 கோடியை போக்குவரத்துக் கழகங்களுக்கு தற்காலிக முன்பணமாக (கடன்) தமிழக அரசு வழங்கியுள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றால், பிற அரசுத்துறை ஊழியர்களைப் போல ஓய்வுபெறும் நாளில் பணப்பலன் வழங்கப்படுவதில்லை.
அதன்படி, போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு தற்போது வரை பணப்பலன் வழங்கப்படவில்லை. இதனால் சிஐடியு சார்பில் நேற்று முன்தினம் மாநிலம் தழுவிய அளவில் தொடர் காத்திருப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பணப்பலன் வழங்குவது தொடர்பான அரசாணை வெளியானது.
இதுதொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் சுன்சோங்கம் ஜடக்சிரு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை முதல் நடப்பாண்டு ஜனவரி வரை ஓய்வு, விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பணிக்காலத்தில் மரணமடைந்தவர்களுக்கும் பணப்பலன் வழங்கும் வகையில் நிதியுதவி கோரி போக்குவரத்துத் துறைத் தலைவர் கடிதம் அனுப்பியிருந்தார்.
இதை பரிசீலித்த அரசு, ரூ.1,137.97 கோடியை தற்காலிக முன்பணமாக (கடன்) போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கி ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.