மதுரை: கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ராம.ரவிக்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவின் விவரம்: தமிழக சட்டப்பேரவையில் 2024-ல் அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின்போது, 27 கோயில்களில் ரூ.85 கோடியில் திருமண மண்டபங்கள் கட்டப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது தொடர்பாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பொத்தன்புளி கிராமத்தில் 2.94 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு ரூ.6 கோடியில் திருமண மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கோயில் நிதியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று விதி இருக்கிறது. எனவே, கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்தும், பழனி கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்ட தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
பழனி கோயில் நிதியில் கள்ளிமந்தையம், ஆண்டிப்பட்டி, உத்தமபாளையத்தில் திருமண மண்டபம் கட்டுவதற்கு தடை கோரி ராம.ரவிக்குமார் தனியாக மனு தாக்கல் செய்தார். திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவதற்கு எதிராக, பாஜக மாவட்டத் தலைவர்கள் பாண்டித்துரை, செந்தில்குமார் ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தன. நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதன் விவரம்: கலாச்சாரம் மற்றும் கட்டிடக் கலையின் அடையாளமான கோயில்களை பாதுகாக்க வேண்டும். கோயில் நிதியை இந்து மத நிகழ்வுகள், கோயில் மேம்பாடு, பக்தர்களின் நலன் ஆகியவற்றுக்குத்தான் பயன்படுத்த வேண்டும். மதச்சார்பற்ற அரசு, கோயில் நிதியில் திருமண மண்டபம், வணிக கட்டிடங்கள் கட்டும் என்று எதிர்பார்க்கவில்லை.
பிற மதத்தினருக்கும் வாடகைக்கு அளிக்கும் வகையில், கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது, அறநிலையத் துறை சட்டத்துக்கு எதிரானது. எனவே, கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டும் அரசாணை ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதேபோல, கோயில் நிதியில் வணிக நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கட்டுவது தொடர்பான அரசாணைக்கு எதிரான வழக்கில், மனுதாரருக்கு அரசாணை நகல் வழங்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.