சென்னை: “பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் மாயமான பல லட்சம் வாக்காளர்களோடு சேர்த்து ஜெகதீப் தன்கரையும் கண்டறியும் பொறுப்பு எதிர்கட்சிக்கு மட்டுமே உரியதாகிறது. ஆளையே காணோம் என்ற பதற்றத்தில் நாடு இருக்க இதில் கூசாமல் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு கேட்கிறது ஒரு கூட்டம்.” என்று பாஜகவை சரமாரியாக விமர்சித்துள்ளார் மதுரை மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மர்ம தேசத்து மனிதர்கள். ஏற்கனவே குடியரசு துணைத்தலைவராக இருந்தவர் திடீரென ராஜினாமா செய்தார். அதன் பிறகு அவர் பற்றிய எந்த விவரமும் கிடைக்கவில்லை. அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரும் பாஜகவை சேர்ந்தவர்தான். அக்கட்சியால்தான் அந்நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார்.
அவ்வளவு பெரிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து பகல் 2 மணிக்கு புறப்பட்டுப் போனவர் என்னவானார் என்று இதுவரை நாட்டுக்குத் தெரியவில்லை.
இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை வரவேற்க டெல்லி விமான நிலையத்திற்கு நான்கு ஒன்றிய அமைச்சர்கள் சென்றுள்ளனர். ராஜினாமா செய்த தன்கரை அனுப்பிவைக்கப் போனது எத்தனை ஒன்றிய அமைச்சர்கள்? எங்கே அனுப்பிவைத்தீர்கள்? அதே இடத்திற்கு புதியவரையும் அனுப்பிவைக்க மாட்டோம் என்று குறைந்தபட்சம் அவரிடமாவது சொன்னீர்களா?
பல லட்சம் வாக்காளர்களோடு சேர்த்து குடியரசு துணைத் தலைவரையும் கண்டறியும் பொறுப்பு எதிர்கட்சிக்கு மட்டுமே உரியதாகிறது. ஆளையே காணோம் என்ற பதற்றத்தில் நாடு இருக்க இதில் கூசாமல் ஆதரவு கேட்கிறது ஒரு கூட்டம்.” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜினாமாவும் நீடிக்கும் மர்மமும்: நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் பதவியேற்றார். அவரது ஐந்தாண்டு பதவிக் காலம் 2027, ஆகஸ்ட் 10-ம் தேதி நிறைவடைய இருந்தது. இந்நிலையில் தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் அனுப்பி வைத்தார்.
‘‘உடல்நலனுக்கு முன்னுரிமை அளித்தும் மருத்துவ ஆலோசனைக்கு கட்டுப்பட்டும் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 67(ஏ) பிரிவின் கீழ் குடியரசு துணைத் தலைவர் பதவியை நான் உடனடியாக ராஜினாமா செய்கிறேன்’’ என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அவரது திடீர் ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது, தற்போதுவரை அதைவிட பரபரப்பாக உள்ளது அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவல் உறுதியாகத் தெரியாதது. ராஜினாமாவுக்குப் பின்னர் அவர் பொதுவெளியில் எங்கும் தோன்றவில்லை. அவரது குடும்பத்தினரோ, அவருடைய அலுவலக அதிகாரிகளோ அவரது இருப்பிடம் பற்றி இன்னும் எதுவும் உறுதிபட எதுவும் கூறவில்லை. இந்தச் சூழலில்தான் தன்கரை முன்வைத்து சு.வெங்கடேசன் எம்.பி. காட்டமான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.