‘பைசன்’ மூலம் கிடைத்த அனுபவங்கள் தொடர்பாக சிலாகித்துப் பேசியிருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பைசன்’. தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் மூலம் கிடைத்த அனுபவம் தொடர்பாக பேட்டியொன்றில் கூறியிருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.
‘பைசன்’ தொடர்பாக அனுபமா பரமேஸ்வரன், “எனக்கு ‘பைசன்’ ரொம்பவே ஸ்பெஷலான படம். ‘பரியேறும் பெருமாள்’ கதையினை மாரி செல்வராஜ் முதலில் என்னிடம் தான் கூறினார். அந்தச் சமயத்தில் பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்து வந்ததால் தேதிகள் ஒதுக்கி கொடுக்க முடியவில்லை. ஏனென்றால் அவர் இறுதிகட்டத்தில் என்னை அழைத்தார். அதில் நடிக்க முடியாமல் போனதற்கு இப்போது வரை வருந்திக் கொண்டிருக்கிறேன்.
‘மாமன்னன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தார். அப்போதும் பல்வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் நடிக்க முடியவில்லை. கடைசியாக ‘பைசன்’ படத்துக்காக அழைத்து பேசினார். உடனே ஒப்புக் கொண்டேன். ரொம்பவே அருமையான படம். மாரி செல்வராஜ் சாருடைய படங்களில் சிறப்பான படமாக ‘பைசன்’ இருக்கும்.
‘பைசன்’ படத்தில் நடித்த அனுபவத்தை மறக்கவே முடியாது. என்னை ஒரு முழுமையான நடிகையாக அப்படம் மாற்றியது. மாரி சாரின் பணிபுரிய விதம் வித்தியாசமானது. இதுவரை எந்தவொரு படத்துக்காகவும் பயிற்சிக்கு சென்றதில்லை. ஆனால், ‘பைசன்’ படத்துக்காக 2 மாதங்கள் படப்பிடிப்பு நடந்த ஊருக்குச் சென்று மக்களிடையே பழகிய விதம் என்னை முழுமையாக மாற்றிவிட்டது.
இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களில் எந்தவொரு காட்சி என்றாலும் துணிச்சலாக நடித்துவிடுகிறேன். அதற்கு காரணம் ‘பைசன்’ மூலம் கிடைத்த அனுபவம்தான்” என்று தெரிவித்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.