வேலூர்: அணைக்கட்டு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள எடப்பாடி கே.பழனிசாமி வந்த நிலையில், கூட்டத்தில் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் கடந்து செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ‘அடுத்த கூட்டத்தில் வேண்டுமென்றே ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்தால் அதன் ஓட்டுநர் நோயாளியாக செல்வார்’ என எடப்பாடி கே.பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணத்தில் நேற்று இரவு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அணைக்கட்டில் பேசுவதற்காக எடப்பாடி பழனிசாமி வாகனம் வந்து நின்ற உடனே, அருகே இருந்த சிறிய தெருவில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது. அதில் நோயாளி இல்லாமல் இருப்பதை அதிமுக தொண்டர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த தகலால் அதிருப்தி அடைந்த எடப்பாடி கே.பழனிசாமி, “என்னோட ஒவ்வொரு கூட்டத்திலும் இதேபோல் ஆளே இல்லாமல் ஆம்புலன்சை தொடர்ச்சியா அனுப்பி மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் வேலையை இந்த கேவலமான அரசு செய்கிறது. இதனால் மக்களுக்கு ஏதாவது ஒன்றானால் யார் பொறுப்பு. நானும் 30 கூட்டத்தில் பார்த்துவிட்டேன் இதேபோல தான் செய்கிறார்கள். நேருக்கு நேர் எதிர்க்க தில்லு, தெம்பு, திராணி இல்லாதவர்கள் இப்படி கேவலமான செயலில் ஈடுபடுகிறார்கள்.
இந்த ஆம்புலன்ஸ் எண், ஓட்டுநரின் பெயரையும் குறித்து வைத்து காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். அடுத்த கூட்டத்தில் வேண்டுமென்றே ஆள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால், ஓட்டி வரும் ஓட்டுநரே அதில் நோயாளியாக ஏற்றி அனுப்பப்படுவார்” என்றார்.
தொடர்ந்து, “விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த துப்பில்லாத அரசு இந்த அரசு. இந்தியாவிலே விவசாயிகளுக்கு அதிக இழப்பீட்டு தொகை பெற்றுத்தந்த அரசு அதிமுக அரசியல். அதிமுக ஆட்சியில் தான் அதிக அளவு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது.
நாட்டிலேயே அதிக உயர்கல்வி படிப்போர் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்ற சாதனையை உருவாக்கியது அதிமுக ஆட்சி. அணைக்கட்டில் 2 புதிய அரசு கலைக்கல்லூரி அமைத்தது அதிமுக,புதிய தாலுகா, அகரம் தடுப்பணை, அரியூர் ரயில்வே மேம்பாலம், நாகநதி ஆற்றில் பாலம் உள்ளிட்ட பல திட்டங்களை அணைக்கட்டு தொகுதிக்கு கொடுத்தது” என்று எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
108 விளக்கம்: அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் வயிறு உபாதை பிரச்சினையால் அனுமதிக்கப்பட்டிருந்த ஓங்கப்பாடி கிராமத்தை சேர்ந்த சந்திரா (60) என்ற மூதாட்டியை வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதற்காக, 108 ஆம்புலன்ஸ்க்கு இரவு 9.45 மணிக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்படி, பள்ளிகொண்டா ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த ஆம்புலன்ஸ் வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேந்தர் இரவு 10.20 மணியளவில் அணைக்கட்டு வழியாக அதிமுக பிரச்சார கூட்டத்தை கடந்து சென்றபோது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பின்னர், அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு சென்ற ஓட்டுநர் சுரேந்தர் நோயாளி சந்திராவை, வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இரவு 12.30 மணியளவில் அனுமதித்துள்ளார்.
ஓட்டுநர் சுரேந்தர் வரும்போது கூட்டத்தை கனிக்காமல் வந்துள்ளார். பிரச்சார கூட்டத்துக்கு சற்று தொலைவில் போலீசார் பேரிகார்டு அமைத்திருந்தனர். ஆம்புலன்ஸ் வாகனத்தை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பக்கத்தில் இருந்த தெரு வழியாக செல்ல அறிவுறுத்தினர்.
அப்படி செல்லும்போது பிரச்சார வாகனத்தை கடந்தபோது பிரச்சினை ஏற்பட்டு ஓட்டுநரை அடிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. அவரால் பின்னோக்கியும் செல்ல முடியவில்லை. பதற்றம் தணிய அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சுமார் 40 நிமிடங்கள் ஓட்டுநர் காத்திருந்து நோயாளியை அழைத்துச் சென்றார் என்று 108 ஆம்புலன்ஸ் வேலூர் மாவட்ட நிர்வாகம் தரப்பில் இருந்து விளக்கம் அளித்தனர்.