‘மீசைய முறுக்கு 2’ மூலம் மீண்டும் இயக்குநராக களமிறங்க இருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி.
ஹிப் ஹாப் ஆதி கடைசியாக இயக்கி, நடித்து தயாரித்த படம் ‘கடைசி உலகப் போர்’. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனை தொடர்ந்து பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார். ஆனால், எதுவுமே அடுத்த கட்டத்துக்கு நகராமல் இருந்தது. இதனால், தனது அடுத்த படத்தினை தானே இயக்கி நடிக்க முடிவு செய்துவிட்டார் ஹிப் ஹாப் ஆதி.
சுந்தர்.சி தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. ‘மீசைய முறுக்கு 2’ என்ற பெயரில் உருவாகும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்று நடிக்கவும் உள்ளார் ஹிப் ஹாப் ஆதி.
‘மீசைய முறுக்கு’ படத்தினை எழுதி, இயக்கி, நடித்திருந்தார் ஹிப் ஹாப் ஆதி. அப்படம் மாபெரும் வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து 2-ம் பாகத்தையும் எழுதி, நடிக்க முடிவு செய்துவிட்டார். ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படத்தையும் முடிக்க திட்டமிட்டு பணிபுரிந்து வருகிறது படக்குழு. அதற்கு தகுந்தாற் போல் நடிகர்கள் ஒப்பந்தம் நடைபெற்று வருகிறது.