இந்நிலையில்தான், இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டார் சுதர்ஷன் ரெட்டி. இவரது பெயரை அறிவித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எங்கள் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்ஷன் ரெட்டி அறிவிக்கப்படுகிறார். பி.சுதர்ஷன் ரெட்டி இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் முற்போக்கான சட்ட வல்லுநர்களில் ஒருவர். ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், குவஹாட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நீண்ட மற்றும் புகழ்பெற்ற சட்ட வாழ்க்கையை அவர் கொண்டுள்ளார்.
சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதிக்கான நிலையான, துணிச்சலான ஆதரவாளராக அவர் இருந்து வருகிறார். ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கான அவரது அர்ப்பணிப்பையும், அரசியலமைப்பு மற்றும் அடிப்படை உரிமைகளை அவர் பாதுகாத்த விதத்தையும் அவரது தீர்ப்புகள் காட்டும்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் என்பது ஒரு சித்தாந்தப் போர். அனைத்து எதிர்க்கட்சிகளும் இதை ஒப்புக்கொண்டுள்ளன. அதனால்தான் நாங்கள் பி.சுதர்ஷன் ரெட்டியை கூட்டு வேட்பாளராக முன்மொழிந்துள்ளோம். ஆகஸ்ட் 21-ஆம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்வார்.” என்று தெரிவித்தார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக தற்போது மகாராஷ்டிரா ஆளுநராக உள்ள தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.