சசோடி: ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மேகவெடிப்பால் திடீரென பெரு மழை பெய்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் 80 மாணவர்களை காப்பாற்றிய சசோடி கிராம தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஹுக்கும் சந்த் நேற்று கூறியதாவது: எங்கள் கிராமத்தில் சீக்கியர்கள் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். அதற்காக மாணவர்களை உணவு சாப்பிட அனுப்புமாறு அவசரப்படுத்தினர். அப்போது காலை 11.40 மணி இருக்கும். அன்று ஆகஸ்ட் 14-ம் தேதி.
மறுநாள் சுதந்திர தினம் என்பதால், விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தோம். அதனால் மாணவர்களை அனுப்பாமல் தாமதப்படுத்திக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில்தான் பெரிய மலை ஒன்று பயங்கர சத்தத்துடன் இடிந்து சரிந்தது. கிராமத்தில் பல வீடுகள் மண்ணில் புதைந்தன. அதைப் பார்த்ததும், மூத்த மாணவர்களை உயரமான பகுதிக்கு ஓடும்படி கத்தினேன்.
சிறிய குழந்தைகளை பிடித்துக் கொண்டு வெளியில் செல்லாதபடி பார்த்துக் கொண்டேன். அதன் பின்னர் இலவச உணவு வழங்கும் இடத்துக்கு சென்று பார்த்தேன். அங்கு பலருடைய உடல்கள் மிதந்து கொண்டிருந்தன. இடிபாடுகளில் சிக்கியிருந்த 30 பேரை வெளியில் கொண்டு வந்து காப்பாற்றினேன். ஆனால், என்னுடைய சகோதரன் நிலச்சரிவில் உயிரிழந்து விட்டார். இவ்வாறு ஹுக்கும் சந்த் கூறினார்.