புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
‘தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும். ஏனெனில், அவர் இந்த பொறுப்புக்கு சரியான மற்றும் சிறந்த தேர்வு என கருதுகிறோம். அவர் மிகவும் பணிவானவர். இது தொடர்பாக அமைச்சர் ராஜ்நாத் சிங், அனைத்து கட்சி தலைவர்கள் உடன் பேசி வருகிறார்’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாக தகவல்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். இந்த சூழலில் இன்று (ஆக.19) காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்கு பிறகு எதிர்க்கட்சி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை நேற்று பிரதமர் மோடி சந்தித்தார். இது தொடர்பான புகைப்படத்தை பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
அத்துடன், “குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். அவரின் நீண்டகால பொது சேவையும் பல துறைகளில் பெற்ற அனுபவமும் நம் நாட்டை பெரிதும் வளப்படுத்தும். இதுவரை காட்டி வந்த அதே அர்ப்பணிப்பு மற்றும் உறுதியுடன் அவர் தொடர்ந்து நாட்டுக்கு சேவை செய்யட்டும் என வாழ்த்துகிறோம்” எனப் பதிவிட்டிருந்தார்.