பாட்னா: உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியை அடுத்த தராளி கிராமத்தில் கடந்த 5-ம் தேதி மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியது. ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் காணாமல் போயினர்.
இதனிடையே, பிஹார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 19 வயதுடைய 3 இளைஞர்கள் உத்தரகாசி பகுதிக்கு கூலி வேலைக்கு சென்றுள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ள குடும்பத்தினர் முயன்றுள்ளனர்.
ஆனால், முடியவில்லை. இதனால் வெள்ளத்தில் சிக்கி 3 பேரும் உயிரிழந்திருக்கலாம் என கருதிய அவர்களுடைய குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளை செய்தனர்.
இந்நிலையில், அந்த 3 பேரும் உயிருடன் வீடு திரும்பியதால் அவர்களுடைய குடும்பத்தினர் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பே அங்கிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கங்கோத்ரி பகுதிக்கு வேலைக்காக சென்றோம். இதனால் நாங்கள் உயிர் தப்பினோம்” என்றார்.