சென்னை: தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தொடரும், காவல் துறையிடம் அனுமதி கோரி கடிதம் வழங்கப்பட்டுள்ளது என உழைப்போர் உரிமை இயக்கம் தெரிவித்துள்ளது.
சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் உழைப்போர் உரிமை இயக்க ஆலோசகர் வழக்கறிஞர் குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது: 13 நாட்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை பொது நல வழக்கு என்ற நாடகத்தை நடத்தி, காவல் துறையைப் பயன்படுத்தி கலைத்தனர்.
இந்த பொதுநல வழக்கைத் தொடர்ந்த தேன்மொழி காவல் துறையினரின் படங்களை ஆவணமாக சமர்ப்பித்துள்ளார். இந்த வழக்கு காவல் துறையின் தூண்டுதலால்தான் தொடரப்பட்டுள்ளது. காவல் துறையின் அடக்குமுறை நடவடிக்கைகளை உயர் நீதிமன்றம் கண்டித்து, கைது செய்தவர்களை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் போராட்டம் நடத்த தூய்மைப் பணியாளர்களுக்கு இடம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. எங்களின் போராட்டம் இன்னும் முடியவில்லை; தொடரும். காவல் துறையிடம் போராட்டம் நடத்த அனுமதி கோரி கடிதம் வழங்கியுள்ளோம். அனுமதி வழங்கவில்லை எனில் அனுமதி கோரிப் போராட வேண்டிய நிலை ஏற்படும்.
காவல் துறை தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படுமா அல்லது நீதிமன்ற உத்தரவின்படி எங்களுக்கு சாதகமாக நடவடிக்கை எடுக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம். தமிழகம் முழுவதும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்கள் மேலும் வலுவடையும். திருமாவளவன் எந்த நோக்கத்துடன் அவரது கருத்துகளைத் தெரிவித்தார் என்பது தெரியவில்லை. தவறான நோக்கத்தில் கூறியிருக்க மாட்டார்.
அவரது ஆதரவும் எங்களுக்குத் தேவை. குப்பையை மனிதர்கள் சுத்தம் செய்யக்கூடாது, இயந்திர மனிதர்கள் ரோபோக்கள் மூலம்தாம் அகற்ற வேண்டும் என்ற நிலை வந்தால் அதை வரவேற்போம். ஆனால் குப்பையை மனிதர்கள் அகற்றும் வரை அவர்களுக்கு பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
கடந்த 2021-ம் ஆண்டு ஜன. 19-ம் தேதி, ‘சமூகப் பொருளாதார காரணங்களை எல்லாம் நன்கு ஆராய்ந்த பிறகு 12 ஆயிரம் தற்காலிகப் பணியாளர்களை மாநகராட்சி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’ என்று முதல்வர் கூறியிருந்தார். அதை தான் இப்போது நிறைவேற்ற வேண்டும் என நாங்கள் கோருகிறோம்.
முதல்வர் மீது நாங்கள் அவதூறு பரப்புவதாக கூறுகின்றனர். நாங்கள் அதுபோன்று எந்த எண்ணத்திலும் போராட்டத்தை நடத்தவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் 10 மண்டலங்களை தனியார்மயமாக்கியபோது எங்களிடம் பணியாளர்கள் வழக்குத் தொடர கோரிக்கை வைக்கவில்லை, தற்போதுதான் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதனால்தான் வழக்கு தொடர்ந்து போராட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.