புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின் சி.பி.ராதாகிருஷ்ணனை போட்டியின்றி தேர்வு செய்ய முயற்சி துவங்கி உள்ளது. இதற்காக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆதரவு கேட்டுள்ளார். தொடர்ந்து அவர் இண்டியா கூட்டணியிலுள்ள கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளார் எனத் தெரிகிறது.
ஆளும் கட்சியின் வேட்பாளர் என்பதால் அதன் தேர்தலில் சிபிஆரின் வெற்றி உறுதி எனக் கருதப்படுகிறது. அதேசமயம், சிபிஆருக்கு எதிராக ஒரு உறுதியான வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் கூட்டணியான இண்டியா சார்பிலும் வியூகம் அமைக்கப்படுகிறது.
செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலுக்காக நாடாளுமன்ற சார்பில் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மொத்தம் 782 எம்பிக்கள் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள். அவர்களில் 542 பேர் மக்களவையிலும், 240 மாநிலங்களவையிலும் உள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெற 392 எம்பிக்களின் வாக்குகள் தேவைப்படுகின்றன. மக்களவையில் மத்திய அரசுக்கு ஆதரவாக 293 எம்பிக்களும், 134 எம்பிக்கள் மாநிலங்களவையிலும் உள்ளனர். இவை மொத்தம் சேர்த்து மத்திய அரசிற்கு 427 எம்பிக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சி எம்பிக்களில் 249 பேர் மக்களவையிலும், 106 பேர் மாநிலங்களவையிலும் என மொத்தம் 355 பேர் உள்ளனர்.
எனினும், எதிர்க்கட்சி எம்பிக்களில் 133 பேரின் நிலை இன்னும் உறுதியாக முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்த 133 முடிவு செய்யப்படாத எம்.பி.க்கள் வாக்குகளின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
குடியரசுத் துணைத் தலைவராக சிபிஆர் தேர்வானால், நாட்டின் ஆளுநர்கள் பட்டியலில் தமிழர்கள் இல்லை என்ற நிலை வரும். அப்போது புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யும்போது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இடம்பெறுவார்கள். மேலும், சிபிஆர் தேர்வு, தமிழகத்தில் காங்கிரஸ்-திமுகவுக்கு சட்டப்பேரவை தேர்தலில் நேரடியான சவாலாகும் சூழல் தெரிகிறது.ஏனெனில் அவர் தமிழ் நாட்டின் கோயம்புத்தூரில் அதுவும் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவராக சிபிஆர் உள்ளார்.
இதிலும், கோயம்புத்தூர் மக்களவை தொகுதியின் எம்பியாக 2 முறை இருந்துள்ளார். இவருக்கு அளிக்கப்படும் புதிய பதவியின் தாக்கம் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எதிரொலிக்கும் என்ற எதிர்பார்ப்பும் பாஜக தலைமையிடம் எழுந்துள்ளது.