கலசப்பாக்கம்: ‘தமிழகத்தில் போதைப் பொருட் கள் புழக்கத்தால் இளைஞர்கள் சீரழிகின்றனர்’ என்று அதிமுக பொதுச் செயலாளர் பனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பேரணி மூலமாக மக்களை சந்தித்து வருகிறார்.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் அதிமுக தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கலசப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதியில் வில்வாரணி நட்சத்திர கோயில் பகுதியில் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: திமுக கூட்டணி வலுவானது என்பதால் தேர்தலில் வெற்றி பெறுவோம் என ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். அதிமுக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வருகின்றன. மக்கள்தான் எஜமானர்கள், தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவர்கள். தமிழகத்தில் அதிமுக ஆட்சியையும் திமுக ஆட்சியையும் ஒப்பிட்டு, எது சிறந்தது என முடிவுசெய்து 2026 சட்டப்பேரவை தேர்தலில் முடிவை வழங்குங்கள்.
வாக்குறுதிகள் நிறைவேறவில்லை: 525 அறிவிப்புகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. முழு பூசணியை சோற்றில் மறைக்கிறார். நீட் தேர்வு ரத்து செய்யவில்லை, ரகசியமும் சொல்ல வில்லை. அப்படி என்றால் பொய் சொல்லித்தானே ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் போதைப் பொருள் சகஜமாகிவிட்டது. இளைஞர்கள் சீரழிவதால் குடும்பங்கள் அழிகின்றன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்கு வரக்கூடிய தேர்தலில் அதிமுக கூட்டணி வெல்ல வேண்டும்.
எல்லா துறையிலும் ஊழல் நடக்கிறது. பணம் கொடுக்காமல் எதுவும் நடக்காது. டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் வருடத்துக்கு ரூ.5,400 கோடியும், நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் மேலிடம் போகின்றது. அப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா..? என்றார்.
சுவாமி தரிசனம்: முன்னதாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கினர். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘தமிழகத்தைச்சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்வது தமிழ்நாட்டுக்கு பெருமை.
கட்சி பேதமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களவை உறுப்பினர்களும் அவரை வெற்றிபெறச் செய்ய ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார். முன்னாள் அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சேவூர் எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.