மதுரை: தமிழகத்தில் செயல்படும் மனமகிழ் மன்றங்களில், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மதுபானம் விற்றால் அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை உட்பட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் தனியார் மனமகிழ் மன்றங்களில் நடக்கும் விதிமீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஏராளமானோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான், வீராகதிரவன் ஆஜராகி, மதுவிலக்குத் துறை ஆணையர் மற்றும் பதிவுத்துறை ஐஜியின் பதில் மனுவை தாக்கல் செய்தனர். பின்னர் நீதிபதிகள், பதிவுத்துறை சார்பில், ‘மனமகிழ் மன்றங்களை சங்க விதிகளின்படி பதிவு செய்வதுடன் எங்கள் பணி முடிந்துவிட்டது’ எனக் கூறப்பட்டுள்ளது.
‘இதை எப்படி ஏற்க முடியும்? மதுவால் இளைஞர்கள் பாதிக்கப்படு கின்றனர். பதிவுத்துறையின் நடவடிக்கை மனமகிழ் மன்றங்களை பாதுகாப்பதாக இருக்கக் கூடாது’ என்று நீதிபதிகள் கூறினர். பின்னர் அவர்கள் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் எஃப்எல்-2 உரிமம் பெற்ற மதுபான விற்பனைக் கூடங்கள் காளான்கள் போல் பெருகி வருகின்றன.
இந்த மனமகிழ் மன்றங்கள் சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படு கின்றன. பின்னர் மதுபானம் விற்க எஃப்எல்-2 உரிமம் பெறுகின்றனர். மனமகிழ் மன்றங்களில் சட்டப்படி விளையாட்டு செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
அதன் உறுப்பினர்களுக்கு மட்டுமே மதுபானங்களை விற்க வேண்டும். ஆனால், அங்கு விளையாட்டு செயல்பாடுகள் இருப்பதில்லை. மது விற்பனைமட்டுமே நடக்கிறது. அதுவும் உறுப்பினர்கள் அல்லாத வெளியாட்களுக்கும் மதுபானங்களை விற்கின்றனர். இந்த மன மகிழ் மன்றங்களில் பதிவுத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் சோதனையே நடத்துவதில்லை.
இதனால் தமிழகத்தில் எப்.எல்-2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையம் போல் செயல்பட்டு உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் மதுபானம் விற்பதை தடுக்க தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படுவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு மது விற்பனை செய்தால் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
மனமகிழ் மன்றங்களை முறைப்படுத்த பதிவுத்துறை ஐஜி, மதுவிலக்கு ஆணையர், மாநகர் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மனமகிழ் மன்றங்கள் தொடர்பாக டிஜிபி 2021-ல் அனுப்பிய சுற்றறிக்கை அடிப்படையில் அங்கு பதிவு மற்றும் உரிம நிபந்தனைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தர வில் குறிப்பிட்டுள்ளனர்.